- செய்திகள்

இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா!

 

இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்காக நாட்டுப்பற்றுமிக்க தலைவர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அமைதிப் போராட்டமா, ஆயுதப் போராட்டமா என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், எல்லோரது இலக்கும் ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றவர்கள் ஆயுதப் போரே ஆங்கிலேயருக்கு தக்க பதிலடி என்று சுதந்திரப் போராட்டக் களத்தில் இறங்கியபோது, மகாத்மா காந்தியடிகள் அகிம்சைப் போரால் இறுதிவரைப் போராடினார். மகாத்மாவின் வித்தியாசமான அமைதிப் போர் ஆங்கிலேயரை அதிகம் அசைத்துத்தான் பார்த்தது. பின்வாங்காத அகிம்சைப் போராட்ட விளைவால் விடுதலை விளைந்தது. வரலாற்றில் ஆயுதத்தைவிடவும் அகிம்சையின் வலிமைக்கான உதாரணமாக இன்றளவும் இது நிலைத்திருக்கிறது.
தங்களின் நியாயங்களுக்காக, உரிமைகளுக்காக, தங்கள் மீது படரும் அதிகாரக் கரங்களின் அச்சுறுத்தலுக்காக ஒடுக்கப்படுவோரும் நசுக்கப்படுவோரும் நிமிர்ந்து நின்று போராடுவதில் பலவகை உண்டு. அதில் உண்ணாவிரதப் போராட்டம் என்பது மிக முக்கியமானதும் அதிக வலிமையானதும் ஆகும்.
சமூக நீதிக்காகப் போராடும் சமூக ஆர்வலர்களும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடும் அடித்தட்டு மக்களும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காக, பெரும்பாலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத்தான் கையிலெடுப்பர்.
அந்தவகையில்தான், மணிப்பூர் மாநில உரிமைகளுக்காக இன்றளவும் அமைதிவழியில் உரிமைப்போர் நிகழ்த்தி வருகிறார் சமுக ஆர்வலரான இளம் பெண் இரோம் ஷர்மிளா.
கடந்த 16 ஆண்டுகளாக இவர் முன்னெடுத்து நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூர் மக்களால் இரும்புப் பெண்மணி என்று கொண்டாடும் இரோம் ஷர்மிளா, தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.
அந்தமுடிவின் அடிப்படையில் வரும் ஆகஸ்டு 9-ம் தேதியோடு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போகிறாராம். மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்திற்காகத்தான் இந்த முடிவாம்.
இத்தனை நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தை யாரும் இதுவரை தொடர்ந்ததில்லை என்று கூறும்படி போராடியிருக்கிறார் இரோம் ஷர்மிளா. ஏன் இத்தனை ஆழமான போராட்டம் என்ற கேள்விக்கான விடை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்புப் படையினரே, கடந்த 2000-மாவது ஆண்டில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 10 பேரை இரக்கம் இன்றி சுட்டுக் கொன்ற நிகழ்வே ஆகும். மேலும், அதைவிடக் கொடுமை சுட்டுக் கொன்றதற்கான எந்த விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் அளிக்காததாகும்.
இந்தக் கொடும் சம்பவம்தான் சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டக் களத்தில் இறங்கத் தூண்டியது. இதனைத் தொடர்ந்துதான் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அயல் நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் 1958-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டம்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
மக்களைப் பாதுக்காக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே மக்களைக் கொன்றால், இந்தக் கொடூரத்தை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். இதனை எதிர்த்து பொதுமக்களும் பல அமைப்புகளும் போராடின. ஆனால், எதற்கும் செவிசாய்க்காத நிலைமைதான் பாதுகாப்பு படையினரிடம் இருந்து வெளிப்பட்டது.
இத்தனை ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தில் இரோம் ஷர்மிளாவுக்கு பல்வேறு கொடுமைகளைத்தான் பாதுகாப்புப் படையினர் செய்தனரே தவிர, நியாயமான தீர்வு நிகழவே இல்லை. இந்தநிலையில்தான், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, அரசியலில் ஈடுபட்டு போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் இரோம் ஷர்மிளா.
நியாயம் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை பொய்க்கக்கூடாது.

Leave a Reply