- செய்திகள், மாவட்டச்செய்திகள்

இன்று சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில் வாக்கு பதிவு செய்திடவேண்டும் ஜெயலலிதா வேண்டுகோள்…

சென்னை, மே.16-
தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில் பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
என்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜனநாயக கடமை
எனதருமை தமிழக வாக்காளப் பெருமக்களே தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.  இந்தச் சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் உங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பெற்றிருக்கின்ற அற்புதமான வாய்ப்பு தான் தேர்தலும், வாக்குப்பதிவும்.
புனித செயல்
தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வது ஒரு புனிதக் கடமை.  ஜனநாயகத்தைக் காப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும் நாம் செய்து கொள்ளுகின்ற மிகப் பெரிய புனிதச் செயலாகும்.
அரசியலில் தன்னுடைய வெற்றிக்காக, தன்னுடைய அதிகாரப் பசிக்காக சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுவதையும்,  அரசியல் ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும் களங்கப்படுத்துவதையும், சூழலுக்கு ஏற்ப திரைக் கதை வசனத்தை அரங்கேற்றுவதையும் தமிழகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.   அத்தகைய தீய சக்தியின் நச்சு முயற்சிகளை தமிழக மக்களாகிய நீங்கள் கவனமாக இருந்து முறியடிக்க வேண்டும்.
உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள
நம்முடைய வாக்குகளை சரியாகப் பதிவு செய்வது, நம்முடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவும்; உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்; அச்சமின்றி வாழவும் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் மறவாதீர்கள்.
வாக்குப் பதிவு நாளான 16.5.2016 (இன்று) அன்று நீங்கள் ஒவ்வொருவரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று உங்கள் பொன்னான வாக்குகளை, தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில் பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply