BREAKING NEWS

இனி மக்கள் எழுத வேண்டும் தீர்ப்பை..!

பிரபஞ்சம் முழுவதும் ஆக்கிரமித்து நீக்கமற நிறைந்து நிற்பது, காற்று! அதனை வாயுதேவன் என்றும் கும்பிடுகிறார்கள். என்றாலும், அக்காற்றை யாரும் ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்க முயலுவதில்லை.  ஆனால், ஆதியும், அந்தமுமில்லா ஆண்டவனை, ஒரு கூண்டுக்குள் பூட்டி வைக்க, ஒவ்வொரு மதத்தினரும் முயன்று வருகின்றனர்.  அதனால் உடைபடுவது கூண்டுகள் மட்டுமல்ல மனிதநேயமும் ஆகும். இடிபட்டவற்றைக் கட்டிவிடலாம்… உடைபட்ட உள்ளங்களை யார் கட்டுவது?

குளத்திலிருந்து தண்ணீரை மொண்டு வருபவர், அதனைக் குளத்துநீர் என்றே நினைக்கின்றனர். ஆற்றிலிருந்து நீரை ஏற்றிவருபவர், அதனை ஆற்றினுடைய நீர் என்றே கருதுகின்றனர்.  ஏரியிலிருந்து நீரைச் சுமந்து வருபவர், அதனை ஏர்த்தண்ணீர் என்றே சொல்லுவார்.  ஆனால், இவையெல்லாம் வான்மழையின் வடிவங்கள் என்பதைப் பலரும் உணர்வதில்லை.  அதுபோலவே பல தெய்வங்களை வணங்குபவர்கள், ஒன்றே கடவுள் – உணர்வே பிரம்மம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஒரு கிணற்றடியில் அடுக்கப்பட்டிருக்கும் அண்டா, குண்டா, தவலை, குடம் ஆகியவற்றில் நிறைந்திருக்கும் தண்ணீரில், ஒரே சூரியனின் பல பிம்பங்கள் காட்சியளிக்கும்.  அதனைப் பார்க்கும் யாரும் பல சூரியன்கள் என நம்புவதில்லை. ஆனால், பல தெய்வங்களைக் கும்பிடுபவர்கள், தங்களுடைய தெய்வம் மட்டுமே உண்மை என்று வாதிடுகின்றனர், போரிடுகின்றனர்.  மகாகவி பாரதியார் ‘பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே” எனப் பாடினார்.  பல மதத்தினவரும் கும்பிடும் தெய்வங்கள் அனைத்தும், எல்லையொன்றில்லாத பரம்பொருள் ஒன்றின் வேறு வேறு அடையாளங்கள் எனவும் அம்மகாகவி எழுதியுள்ளார்.

இறைவன் உண்மையான மனிதர்களைத் தேடி, சரியான திசையில் பயணிக்கின்றான்.  ஆனால், உண்மையான கடவுளைத் தேடிச் செல்வதாக நினைத்துக் கொண்டு, தவறான திசைகளிலேயே பயணிக்கின்றனர் மதவாதிகள்.  அதனை ஏசுநாதர், ‘நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்” (யோவான் வசனம் 16) எனத் தெரிவித்துள்ளார்.  உண்மையான விசுவாசிகள், மற்ற மதங்களையும் மற்ற மனிதர்களையும் சந்தேகிக்கமாட்டார்கள்.  ஏசுநாதர் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, திருடன் ஒருவன் மற்றொருவனிடம் திருடுவது போன்று தோன்றுகிறது. எனவே, அத்திருடனைப் பற்றி ‘இப்பொழுது நீ திருடினாயா? இல்லையா? உண்மையைச் சொல்” என்றார்.  அதற்கு அத்திருடன் ‘கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்.  நான் திருடவே இல்லை” என்கிறான்.  அதற்குப் பெருமானார், ‘நீ கடவுள் மேலுள்ள அசாத்தியமான நம்பிக்கையைச் சாட்சியாக வைத்துக் சொல்லுகிறாய்! நானோ என் கண்களின் மேலுள்ள நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.  எனவே நீ சொல்வது தான் சரி” என்கிறார்.

மெய்யன்பர்கள், தேவன் கோயிலுக்குள்ளே மட்டும்தான் இருக்கின்றான் என நம்புவதில்லை! இறைவனைக் கோயிலுக்குள் அடைக்காமல் தங்கள் இதயத்தில் தான் இருத்துவார்கள்.  தீர்க்கதரிசி நபிகள் நாயகம் சீடர் அபுபக்கரோடு மதினாவை நோக்கிப் பயணிக்கின்றார்.  அப்பொழுது ஏகத்துவத்தில் நம்பிக்கையில்லாத படையொன்று, அவரைத் துரத்திக் கொண்டுவருவதை உணர்கிறார்.  அந்நேரத்தில் அபுபக்கர் சித்திக், ‘‘நம்மை நோக்கி ஒரு பெரும்படை வருகிறது.  ஆனால், நாம் இருவர் தாமே இருக்கிறோம்” என்றார்.  அதற்குப் பெருமானார், ‘நாம் மூவரல்லவா இருக்கிறோம்” எனச் சொன்னார்! ‘அந்த மூன்றாமவர் எங்கே” என்றார் அபுபக்கர்.  அதற்குத் தீர்க்கதரிசி, ‘ஆண்டவர் ஒருவர் நம்மோடு இருக்கிறாரே, அவர் தாம் அந்த மூன்றாமவர்” என்றார்.  மகான்களும் சித்தர்களும் உள்ளே தேடுவார்களே தவிர வெளியில் தேடமாட்டார்கள்.

இறைவன் ஞானவான்களைத் தாமே நாடி வருகிறார் என்பதற்குத் திருவாய்மொழியில்  ‘ஓர் அருமையான செய்தி உண்டு.  நம்மாழ்வார் ஒரு ஞானவான் என்பதை உணர்ந்து, பெருமாள் அவரைத் தேடிக்கொண்டு, புளிங்குடிக்கு வருகிறார். ஆனால், நம்மாழ்வார் புறப்படுவது போல் தோன்றவில்லை என்பதால், அங்கேயே படுத்துவிடுகிறார் திருமால்.  அப்படியும் அவர் புறப்படவில்லை என்பதால் வரகுணமங்கையில் உட்கார்ந்து காத்திருக்கிறார், அந்தக் கார்மேகவண்ணன்! அதற்குப் பிறகும் நம்மாழ்வார் புறப்படாததால், ஸ்ரீவைகுண்டத்தில் நிலையாக நின்றுவிடுகிறார் பெருமாள், நம்மாழ்வாரை கையோடு அழைத்துக் கொண்டு போவதற்காக!

திருஞானசம்பந்தர் இறைவன் 84 ஆயிரம் உயிர்களையும் படைத்து, அவ்வுயிர்கள் தோறும் உறைகின்றான் எனத் திருவீழிமிழலைப் பதிகத்தில் பாடுகின்றார். குமரி மாவட்டத்திலுள்ள தாணுமாலயப் பெருமாள் கோயிலின் கோபுரத்தில் ஞானசம்பந்தர் பாடிய 84 ஆயிரம் உயிர்களின் சிற்பங்கள் அனைத்தும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இறைவனை மனத்திற்குள்ளேயே தேடவேண்டும் என்பதற்குப் பூசலார் நாயனார் வரலாறு ஒரு சரியான எடுத்துக்காட்டு.  காடவர்கோன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை வெளியே கட்டியதுபோல், திருநின்றவூர்ப் பூசலார் தம் மனத்திற்குள்ளேயே கோயிலை எழுப்புகின்றார். சிவபெருமான் வெளியிலே கட்டிய கோயிலுக்குள் புகமறுத்து, பூசலாரின் நெஞ்சக் கோயிலுக்கே எழுந்தருளுகின்றான்.

உள்ளத்துக்குள்ளே இருக்கின்ற இறைவனை ஊடுருவிப் பார்க்காமல், வெளியே தேடுகின்ற மனிதர்களைப் பார்த்து ‘உள்ளத்து ஒருவனை, உள்ளுறு சோதியை, உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை, உள்ளமும் தானும் உடனே இருக்கினும், உள்ளம் அவனை உரு அறியாதே” எனத் திருமூலர் பாடியுள்ளார் (திருமந்திரம் 240வது பாடல்)

சித்தர்கள் அனைவரும் இறைவனை உள்ளே தேடுபவர்களாகவும், இறைவனுடைய தூதர்களாகவும் திகழ்ந்தார்கள்.  எந்தச் சித்தரும் எந்தவொரு கோயிலையும் கட்டவில்லை.  மேலும் விக்கிரக ஆராதனையில் ஈடுபடுவோரை எள்ளிநகையாடவும் செய்தார்கள்.

  ‘நட்டகல்லை தெய்வமென்று

                நாலு புஷ்பம் சாத்தியே

                சுற்றி வந்து மொண மொணவென்று

                சொல்லும் மந்திரம் ஏதடா?

                நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

                சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்பது சிவவாக்கியார் பாடல்.

தாயுமானவர் “நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம்! அன்பே! மஞ்சள்நீர் பூசைகொள்ள வாராய்! பராபரமே!” என்று நெஞ்சத்தைக் கோயில் ஆக்கவேண்டியதின் அவசியத்தை வற்புறுத்தியுள்ளார்.

வள்ளலார் ஒரு சன்மார்க்கியின் நெஞ்சமே இறைவன் வாழும் வீடு என்பார்.  ‘எல்லா உயிர்களையும் சமமாகக் கருதி, வெளியே நடிக்காமல் நெஞ்சத்துள்ளே ஒத்து, அவர்களைச் சமஉரிமையுடையவர்களாய் மதித்து, அதனால் யார் யார்  மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவர்களுடைய மனம்தான் இறைவன் இருக்கும் இருப்பிடம்” என்றார் வள்ளலார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இறைவன் அவரவர் உள்ளத்தில் உறைவதன்றி, வேறெங்கும் கிடையாது என்றார்.  ‘கோயில் கோபுரத்தில் தேடிப் பார்த்தேன்; தெப்பம் தேரினில் தேடிப் பார்த்தேன் எங்கும் தேவனைக் காணவில்லை” என்பதோடு ‘உள்ளத்துள் உள்ளானடி

அதுநீ உணர வேண்டுமடி!

உள்ளத்தில் காண்பாய் எனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி!” எனப்பட்டுக் கத்தரித்தாற் போல் பாடியுள்ளார்.

எங்கும் நிறைந்திருக்கும் காற்றை ஒரு பலூனில் அடக்க நினைத்தால், பலூன் வெடித்துவிடும் அதுபோல் விண்ணும் மண்ணும் வியாபித்திருக்கின்ற பரம்பொருளைக் கோயில், மசூதி, தேவாலயம் போன்ற பலூன்களில் அடைக்க முயன்றால், மனிதர்களின் மண்டைகள் உடையும்.

இறைவனை உள்ளத்தில் மட்டும்தான் காணவேண்டும் எனும் தீர்ப்பை நம் மக்கள் எழுதத் தொடங்கிவிடுவார்களானால், அதுவே மானுடத்தின் வெற்றியாகும்.

 

 

 

 

 

                                                                                                                  – பேராசிரியர் தி.இராசகோபாலன்,

தொடர்புக்கு: tr.arooran@gmail.com

 

                                                                                                                 

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *