- செய்திகள், வணிகம்

இந்த வாரத்தில் 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் கரடியை ஓட விடுமா காளை?

புதுடெல்லி, ஏப்.11:-

தொடர்ந்து 2 வாரங்களாக சரிவு கண்ட  பங்குச் சந்தைகள் இந்த வாரமாவது ஏற்றம் காணுமா என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் உள்ளனர். தொழில்துறை உற்பத்தி, சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் இந்த பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று நிபுணர்கள் முன் அறிவிப்பு செய்துள்ளனர்.

விடுமுறை

பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, ராம நவமி ஆகியவற்றை முன்னிட்டு வரும் வியாழன், வெள்ளிக் கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாரத்தில் 3 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.

பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி, மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளிவருகிறது. இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணியாக இவை இருக்கும். மேலும், நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகளும் சந்தையில் எதிரொலிக்கும்.

ரூபாய் மதிப்பு

இது தவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு, சர்வதேச நிலவரங்கள், அன்னிய முதலீடு, உலக சந்தையில்  பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம் போன்றவையும் இந்த வார பங்கு  வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 சதவீதம் வீழ்ச்சி கண்டு 24,673.84 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 2 சதவீதம் சரிந்து 7,555.20 புள்ளிகளில் நிலை கொண்டது.

Leave a Reply