- செய்திகள், வணிகம்

இந்த ஆண்டின் 2-வது பாதியில் 4ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ தொடங்கும்

புதுடெல்லி, பிப்.22:-
ரிலையன்ஸ் ஜியோ வர்த்தக நோக்கில் 4ஜி சேவையை இந்த ஆண்டின் 2-வது அரையாண்டில் அறிமுகம் செய்யும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி இது குறித்து கூறியதாவது:-
நாட்டின்  மக்கள் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை  வர்த்தக செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டின் 2-வது  அரையாண்டில்  அறிமுகம் செய்யப்படும். நாட்டின் 80 சதவீத மக்களுக்கு அதிவேக மொபைல்  பிராண்ட் பேண்ட், வாய்ஸ் சேவை கிடைக்கும்.
விலை குறைவாகவே இருக்கும்
சர்வதேச  சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு  குறைவாகவே இருக்கும். தேவையை காட்டிலும் சப்ளை அதிகமாக உள்ளதே இதற்கு  காரணம். கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது  ஆதாயம்  அளிப்பதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடைபெற்ற பாகப்பிரிவினையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு பிரிவு அனில் அம்பானிக்கு சென்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு  பிறகு மீண்டும் தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ மூலமாக முகேஷ் அம்பானி களம் இறங்கியுள்ளார். கடந்த டிசம்பரில் 4ஜி சேவையை தனது ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் இலவசமாக வழங்கியது. நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுப்படுத்துவதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு  இந்த சேவையை முகேஷ் அம்பானி இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply