- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்-கவர்னர் உரையுடன் சட்டசபை இன்று கூடுகிறது

சென்னை, ஜன.20-
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று(புதன்கிழமை) கூடுகிறது. சட்டசபையில் காலை 10.30 மணிக்கு  கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்துகிறார். அவரது உரையில் அரசின் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பாணையை தமிழக சட்டசபையின் செயலாளர் ஜமாலுதீன் கடந்த 10-ந் தேதி வெளியிட்டார்.
கவர்னர் உரை

இதன்படி தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் ரோசய்யா இன்று காலை சட்டசபைக்கு வருகிறார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து செல்வார்கள். கவர்னர் சபைக்கு வருவதற்கு வசதியாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்புள்ள நீண்ட மேஜைகள் அகற்றப்பட்டு அங்கு சிவப்புக்கம்பள தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருக்கும். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் ரோசய்யாவை அமர வைப்பார்கள். இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்துகிறார்.

சாதனைகள், திட்டங்கள்

கவர்னர் உரையில் தமிழக அரசின் சாதனைகளும், அரசின் முக்கிய திட்டங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெறும். வரும் மே மாதம்  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் புதியதாக சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் உரையில் கடந்த 4½ ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் துறை வாரியாக பட்டியலிடப்படும். குறிப்பாக, மக்களை கவர்ந்துள்ள இலவச டி.வி. மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவான புள்ளி விவரங்கள் கவர்னர் உரையில் இடம்பெறும் என்று தெரிகிறது. கவர்னர் ஆங்கிலத்தில் நிகழ்த்தும் உரை நிறைவடைந்ததும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் நிகழ்த்துவார். அத்துடன் இன்றைய சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும்.
ஜெயலலிதா பதில்
இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதுபற்றி சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இன்று பிற்பகல் நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதன் பின்னர் கூடும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும்.
இந்த விவாதம் சுமார் 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு இறுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதிலளித்து உரையாற்றுவார்.
எதிர்க்கட்சிகள் தீவிரம்
சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்பி மக்களின் கவனத்தை ஈர்க்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிவாரணப் பணிகள், செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், சட்டம்-ஒழுங்கு, ஜல்லிக்கட்டுக்கு தடை போன்ற பல பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.  எனவே இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் வருவாரா?
கடந்த ஆண்டு நடந்த கூட்டத் தொடரில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவைக்காவலர்கள் வெளியேற்றிய போது கடுமையான தள்ளுமுள்ளு நேரிட்டது. எனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அவையில் இருந்து ஒரு கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கும்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது.
அவர்களில் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேரும், ஒரு கூட்டத் தொடர் மற்றும் இரண்டாவது கூட்டத்தொடரில் 10 நாட்கள் கூடுதலாக பங்கேற்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது. அவை உரிமைக் குழு விசாரணையும் நடத்தப்பட்டது.
எனவே இன்று தொடங்கி நடக்க இருக்கும் கூட்டத்தொடரின் முதல் 10 நாட்களுக்கு இந்த 6 எம்.எல்.ஏ.க்களால் பங்கேற்க முடியாது.  எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உட்பட மற்றவர்கள் பங்கேற்க முடியும். ஆனால், விஜயகாந்த் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டசபையில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத் தொடரிலாவது விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply