- செய்திகள், வணிகம்

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு மீண்டும் சிக்கல் எச்-1பி விசாவுக்கு மீண்டும் கட்டணம்

வாஷிங்டன், டிச. 16:-

அமெரிக்காவில் வேலைக்கு செல்வதற்காக இந்திய மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுவோர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா அல்லது எல்-1 விசாவுக்கு மீண்டும் கட்டணமாக 2 ஆயிரம் டாலர்(ரூ.1.37லட்சம்) விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

9/11 ஹெல்த்கேர் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்க எம்.பி.க்கள் சப்தமில்லாமல் பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக செல்லும் இந்திய சாப்ட்வேர் நிறுவனப் பணியாளர்களுக்கு எச்-1பி விசா மற்றும் எல்-1 விசா வழங்கப்படுகிறது.

2001-ம்ஆண்டு செப்டம்பர் 11-ந்ேததி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிய போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோரின் நலனுக்காகவும், மருத்துவச்செலவுக்காகவும் உதவ நிதி திரட்ட 9/11 சுகாதாரம் மற்றும் இழப்பீடு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதற்காக எச்-1பி மற்றும் எல்-1  விசா வழங்கப்படும்போது, அதற்கு கட்டணமாக 2 ஆயிரம் டாலர் விதிக்கப்பட்டது.   கடந்த 2006-ம்ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி புலனாய்வு அதிகாரி ஜேம்ஸ் ஜட்ரோகா என்பவர் சுவாசக்கோளாறு நோயால் இறந்தார். இவர் இரட்டைகோபுரம் தகர்க்கப்பட்டபோது மீட்புபணியில் ஈடுபட்டவர். இவர் மறைவையடுத்து, இந்த சட்டத்துக்கு இந்த அதிகாரியின் பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,  எச்-1பி விசாவுக்கு 2ஆயிரம் டாலர் கட்டணம் விதிப்பதை நீட்டித்து நிரந்தரமாக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய மென்பொருள் நிறுவனங்கள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 8 கோடி டாலர் வரை கட்டணமாக அமெரிக்காவுக்கு செலுத்தியதால், இந்த மசோதா இந்திய மென்பொருள் நிறுவனங்களை கடுமையாக பாதித்தது.

இதில் எச்-1பி விசா மற்றும் எல்-1 விசா கட்டணத்தில் 50 சதவீதத்தை நிறுவனங்களும் மீதியை ஊழியர்களும் செலுத்திவந்தனர். மேலும், கடந்த வாரம் நடந்த அமெரிக்க செனட் கூட்டத்தில் இரு எ்ம்.பி.க்கள், எச்-1 பி விசா அளவை 15 ஆயிரமாக குறைக்க வேண்டும், அதிகமாக ஊதியம் பெறுவோர்களுக்கு மட்டுமே இந்த விசாவை வழங்க வேண்டும் என்பதற்கான மசோதாவை முன்மொழிந்தனர்.

இப்போது எச்-1பி விசா ஆண்டுக்கு அதிகபட்சமாக 85 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் 20 ஆயிரம் விசாக்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களில் உயர்கல்வி முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply