- செய்திகள், தேசியச்செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பற்றிய விமர்சனம் எச்.ராஜா கருத்துக்கு பா.ஜனதா மேலிடம் அதிருப்தி

புதுடெல்லி, பிப்.23-

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜா பற்றி, எச்.ராஜா தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததற்கு பா.ஜனதா மேலிடம் அதிருப்தி தெரிவித்து இருக்கிறது.

டி.ராஜாவின் மகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, கோவையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகள் ‘தேச விரோத’ போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

சுட்டுக்கொல்ல…

‘‘தேச விரோத போராட்டத்தில் ஈடுபட்ட அவருடைய மகளை சுட்டுக்கொல்லும்படி டி.ராஜா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு கட்டளையிட்டு இருக்க வேண்டும். எனது மகள் அது போன்ற தேச விரோத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தால், தேசப்பற்றை நிரூபிப்பதற்காக எனது மகளை சுட்டுக் கொன்று இருப்பேன்’’ என்று, எச்.ராஜா கூறி இருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு அதிருப்தி தெரிவித்ததுடன், இந்த கருத்து தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றும் அறிவித்து இருக்கிறார்.

ஏற்க முடியாது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெங்கையா நாயுடு பின்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது இது குறித்து கூறியதாவது-

வரம்பு மீறாமல்

‘‘எச்.ராஜா கூறியதாக வெளியான தகவல் எங்களுக்கு ஏற்புடையது அல்ல. தேசப்பற்று குறித்தும் தேசிய ஒற்றுமை குறித்தும் அவருடைய கோணத்தில் வலுவான கருத்துகள் இருக்கலாம். ஆனால், அது போன்ற (டி.ராஜா பற்றி) கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

எச்.ராஜா கூறியதை கட்சி அங்கீகரிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது. விமர்சனங்கள் வரம்பு மீறாமல் பண்புடன் இருக்க வேண்டும்’’.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply