- காஞ்சிபுரம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

இந்திய அளவில் சிறுசேமிப்பில் தாம்பரம் கோட்டம் முதலிடம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தகவல்

காஞ்சிபுரம்,பிப்.13-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 56,000 பேர் புதிய கணக்குகள் தொடங்கி, தாம்பரம் கோட்டம், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
56 ஆயிரம் புதிய கணக்குகள்
அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்கள், மத்திய அரசின் நிதித் துறையால் வடிவமைக்கப்பட்டவை. இது மாநில அரசுக்கு மிகச் சிறந்த நிதி ஆதாரம். மாநிலத்தில் திரட்டப்படும் சிறுசேமிப்பு முதலீடுகளில், 50 சதவீதம் அந்தந்த மாநிலத்துக்கே 9.5 சதவீத வட்டி வீதத்தில், நீண்டகால கடனாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
மத்திய அரசால் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்புத் திட்டமான, செல்வமகள் சேமிப்புத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மிக சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது. இத் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, தாம்பரம் கோட்டத்தில், இதுவரை சுமார் 56,000 பேர் புதிய கணக்குகளை இந்த நிதியாண்டில் தொடங்கியுள்ளனர்.
தாம்பரம் கோட்டம் முதலிடம்
சுமார் 8 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டு, வசூல் சாதனை செய்து, தமிழகம் மட்டும் அல்லாமல், அகில இந்திய அளவில், தாம்பரம் கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
பொதுமக்கள் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களில், புதிதாக கணக்கு தொடங்கி நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன் பெறும் வகையில், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply