- செய்திகள், விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

 

மும்பை, ஏப். 4:-

இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானான ராகுல் டிராவிட்டை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட வாரியத்தின் ஆலோசனைக் குழுவினர் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவது குறித்து டிராவிட்டின் விருப்பத்தை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிந்தவுடன், பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சர் பதவி விலகினார். அதன்பின், இப்போது வரை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இன்றி முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரியை இயக்குநராகக் கொண்டு விளையாடி வருகிறது.  இதற்கிடையே டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. ஆதலால், ரவி சாஸ்திரியை இயக்குநர் பதவியில் தொடர்ந்து வைத்திருக்கலாமா என வாரியம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்துவரும் 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு அணியைத் தயார் செய்யும் விதமாக தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வாரிய ஆலோசனைக்குழு நடத்திய கலந்தாய்வில் டிராவிட்டின் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இப்போது, இந்திய ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டு வருகிறார். இவரின் தலைமையில் இந்திய ஏ அணி சமீபத்தில் உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டது.

இதையடுத்து, இப்போதுள்ள இந்திய அணியை சிறப்பாகத் தயார் செய்ய தலைமை பயிற்சியாளராக டிராவிட்டை நியமிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 2016 ஜூன் முதல்2017ம் ஆண்டுமார்ச் வரை 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியை சிறப்பாகத் தயார் செய்ய அனுபவம் வாய்ந்த டிராவிட் தலைமைபயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

ஆனால்,  நீண்ட காலம் அதாவது, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை அணிக்கு தலைமைபயிற்சியாளராக தொடர்வதற்கு ஒப்பந்தம் செய்தால் மட்டுமே தான் தலைமைபயிற்சியாளராக இருப்பேன் என டிராவிட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply