- செய்திகள், விளையாட்டு

இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவீர்களா? ராகுல் டிராவிட் ருசிகர பதில்

புதுடெல்லி, ஏப். 7:-

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவீர்களா என்பது குறித்து முன்னாள் வீரரும், பேட்டிங் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான அணி, இந்தியா ஏ அணி ஆகியவற்றுக்கு பயிற்சியாளராகவும், ஐ.பி.எல். போட்டியில் டெல்லி ேடர்டெவில்ஸ் அணிக்கு ஆலோசகராகவும் ராகுல் டிராவிட் இப்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தலைமைப் பயிற்சியாளர் இன்றி, இயக்குநர் ரவிசாஸ்த்ரி ஆலோசனையில் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதற்கிடையே வாரியத்தின் ஆலோசனைக்குழு சமீபத்தில் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் பயிற்சியாளராக ராகுல்டிராவிட்டை நியமிப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து டிராவிட்டின் கருத்தையும் ஆலோசனைக்குழு கேட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், முன்னாள் வீரர்  ராகுல்டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவீர்களா என்பது தொடர்பான கேள்விக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு நாளும் சில விஷயங்களை செய்து அதன் மூலம் பாடம் கற்று வருகிறேன். அதன்படி நான் இப்போது  பல பாடங்களை பயிற்சியாளராக இருந்து கற்று வருகிறேன்.  இது மிகச்சிறந்த அனுபவம். நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் வருவது குறித்து  எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு அனைத்து விஷயங்களும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்கு சரியான நேரம், தகுதி வர வேண்டும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். இப்போது நான் தயாராக இருக்கிறேன், அல்லது தயாராக இல்லை என்று எதையும் கூறிவிட முடியாது.

எந்த முடிவும் இதுதொடர்பாக நான் எடுக்க நேர்ந்தால் அதற்கு அதிகமான ஆலோசனைகள் தேவை. நான் நினைப்பதை எதையும் உடனடியாக செய்துவிட முடியாது. அதற்கு அதிகமான உழைப்பு, சக்தி, நேரத்தை செலவிடவேண்டும். 100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்த பணியை செய்ய வேண்டும். பயிற்சியாளராக இருந்து வெற்றி பெறுவதைக் காட்டிலும் எப்படி பணியாற்றினோம் என்பது தான் முக்கியம்.

இப்போதுள்ள நிலையில், நான் பயிற்சியாளர் பதவியில் நான் கத்துக்குட்டி. ஒருவீரராகவும், கேப்டனாகவும் இருந்ததைக் காட்டிலும் பயிற்சியாளராக இருக்கும் போது அதிகமான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆதலால் எந்த முடிவு எடுத்தாலும் நன்கு ஆலோசித்தே எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply