- உலகச்செய்திகள், செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் சர்தாஜ் அஜிஸ் நம்பிக்கை

இஸ்லாமாபாத், மார்ச். 2:- பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, பாகிஸ்தான் குழு இந்தியா வரும் என்றும், இந்தியா – பாகிஸ்தான் இடையே வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்றும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியுள்ளார்.

பதான்கோட் தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக, இரு நாட்டு வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, கடந்த ஜனவரியில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஜனவரி 2-ந்தேதி, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 7 வீரர்கள் உயிரிழந்தார்கள். தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.
விசாரணை குழுக்கள்

இதற்கிடையே, இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், 6 பேரை கொண்ட சிறப்பு விசாரணை குழுவை பாகிஸ்தான் அடைத்துள்ளது. இவர்கள் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். பாகிஸ்தான் பதிவு செய்த எப்.ஐ.ஆரில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பெயர் இடம்பெறவில்லை. இதன் தொடர்ச்சியாக 5 பேரை கொண்ட கூட்டு விசாரணைக்குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:-

பதான்கோட் தாக்குதலால் இரு தரப்பு பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது துரதிருஷ்டமானது. இதன்பின்னர், பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டது.

முதலில் விசாரணை

இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட நவாஸ் ஷெரீப், விசாரணையில் தேவையான உதவியை பாகிஸ்தான் செய்யும் என்று உறுதி அளித்தார். விசாரணை குறித்து இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் அவ்வப்போது தொடர்பு கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்பு விசாரணை குழுவினர் இந்தியாவுக்கு வந்து விசாரணை மேற்கொள்வார்கள். அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே ெவளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காஷ்மீர் உட்பட இரு நாடுகளுக்கு இடையே உள்ள அனைத்து விவகாரங்களும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அண்டை நாடுகளுடன் சுமுக உறவை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான், ஷெரீப் அரசுடைய கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply