- உலகச்செய்திகள், செய்திகள்

இத்தாலி கடற்படை அதிகாரிகளை இந்தியா விடுவிக்க வேண்டும் ஐ.நா. நடுவர் நீதிமன்றம் உத்தரவு…

நியூயார்க், மே 3:-

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை இந்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு

கடந்த 2012 பிப்ரவரி 15-ந்தேதி கேரளக் கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த இரு இந்திய மீனவர்கள் மீது, அப்பகுதியாகச் சென்ற இத்தாலி கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் மாசிமிலோன் லட்டோர், சால்வடோர் ஜிரோன் ஆகியோர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் இந்திய மீனவர்கள் இருவரும் பலியானார்கள்.  கடற் கொள்ளையர்கள் என நினைத்து மீனவர்களை சுட்டதாக விசாரணையில் இத்தாலி கடற்படையினர் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்
இதைத்தொடர்ந்து லத்தோர் மற்றும் ஜிரோன் ஆகிய இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை கைவிடுமாறு இத்தாலி அரசு தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்தது. இதற்கிடையே இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவரான லட்டோர், உடல் நலக்கோளாறு காரணமாக ஏற்கெனவே இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் ஜிரோனியை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுத்து விட்டது.
நடுவர் நீதிமன்றம்
இதற்கிடையே, இத்தாலி இந்த விவகாரத்தை ஐநா நிரந்தர சர்வதேச நடுவர் நீதிமன்றத்திடம் எடுத்துச்சென்றது. இந்த விவகாரத்தில் இத்தாலி கடற்படையினர் இருவரையும் இந்தியா  விடுவிக்க வேண்டும் என்று ஐநா நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மறுப்பு
ஆனால், இந்த தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இத்தாலி அரசு இந்த உத்தரவை , உண்மைக்கு மாறாக திரித்துக் கூறியுள்ளது. கடற்படை வீரர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரியும்.  சலுகை காட்டுமாறும் இந்திய உச்ச நீதிமன்றத்தை இத்தாலியும் மத்திய அரசும் அணுக வேண்டும் என்று ஐநா நடுவர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் ்அல்லாமல், ஜிரோனை இத்தாலிக்கு அழைத்து வர வாய்ப்பு இருந்தால், அவரை தேவைப்பட்டால் விசாரணையின் போது இந்தியாவுக்கு அனுப்பிவைப்போம் என்று இத்தாலி  அரசு உறுதிமொழியும் அளிக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது. ஆனால்,  ஜிரோனை விடுதலை செய்யுமாறு  தீர்ப்பளித்துள்ளதாக இத்தாலி தவறாக சித்தரிப்பதாக மத்திய  அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

Leave a Reply