BREAKING NEWS

’இதயத்தில் கிஞ்சிற்றும் இரக்கம் கொள்ளாதீர்கள்’ ~ பா.ஜீவசுந்தரி

இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்துப் பல கோடிக் கணக்கான குழந்தைகளையும் மக்களையும் கொன்றார். போர் எனும் கொடிய அரக்கனை ஏவி மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் அழித்தார்.

ஸ்வஸ்திகா சின்னம், நாஜி கட்சி, காவல் முகாம்கள், இரண்டாம் உலகப்போர் – இவை அனைத்தும் இறந்த காலச் சம்பவங்கள் என்றாலும், மனித இனத்தின் கடைசி ஓர் உயிர் இருக்கும்வரை, ஹிட்லர் என்ற சர்வாதிகாரியை இந்த உலகம் அவ்வளவு எளிதில் மறந்து விடாது.

இன்றும் கூட ஜப்பானில் பிறக்கும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு ‘ஹிட்லரின் ஆவி’ கண்டிப்பாக பதில் சொல்லியே தீர வேண்டும். மனித குல வரலாற்றில், மிகவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய காலகட்டங்களில் ஒன்று, நாஜி தத்துவத்தின் கீழ் ஜெர்மனியை ஆண்ட ஹிட்லரின் காலம் என்பது மிகையல்ல.

அறிவுசார் உலகமும் நூல்களும் முதல் எதிரிகள்

‘மெயின் காம்ஃப்’ ஹிட்லரின் சுயசரிதை. ஹிட்லரின் இந்நூலைச் சிறந்த இலக்கியமென்றோ, சிறந்த வரலாறென்றோ எந்த வரிசையிலும் வைத்துப் போற்ற முடியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பிற்காலத்தில் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியான பிறகு, யூதர்களையும் ரஷ்யர்களையும் ஸ்லாவ் இன மக்களையும் கொடூரமாகக் கொலை செய்ததற்கு இந்நூலே சிறந்த சாட்சியமாகவும் விளக்கமாகவும் இருக்கிறது. இது ‘ஜெர்மானியர்களின் பைபிள்’ என்றழைக்கப்பட்டது. ஜெர்மனியின் அனைத்து நூலகங்களிலும் ‘மெயின் காம்ஃப்’ கட்டாயமாக இடம் பெற்றது. ஹிட்லரின் சர்வாதிகாரத்தின் மூலம் அது சாத்தியமானது. ஜெர்மனியில் 1936-ம் ஆண்டில் இந்நூல் சுமார் இருபது லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது. இருபதாம் நூற்றாண்டில் நாஜிக்கள் ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனியில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. தான் சுயசரிதை எழுதும் வரை, வேறு எவருடைய புத்தகங்களையும் ஹிட்லர் மதித்ததே இல்லை என்பது வரலாறு. மொத்தத்தில் அறிவுசார் உலகமும் புத்தகங்களும் அவரைப் பொறுத்தவரை எட்டிக்காயாகக் கசந்தன. தன் சுயசரிதை மட்டுமே வேதமாக இருக்க வேண்டுமென்றும் அவர் நினைத்தார்.

‘யூதர்கள், கம்யூனிஸ்ட்கள், ஸ்லாவ் இனத்தவர்கள் ஆகியோர் ஜெர்மனியின் எதிரிகள். யூதர்கள் வேருடன் அழிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களின் அழிவில்தான் ஜெர்மனியின் வளர்ச்சி ஆரம்பமாகும்’ – இவையே இந்நூலின் முக்கியமான கருத்துகளும் பேசு பொருளுமாகும். இந்த நூல் பற்றி வரலாற்றாசிரியர்கள், ‘மிதமிஞ்சிய தாழ்வு மனப்பான்மையாலும் குற்ற உணர்ச்சியாலும் உந்தப்பட்டு எழுதப்பட்ட முரண்பாடுகளின் மொத்த வடிவம்தான் இந்த நூல்’ என்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் சாவுக்கும், ஜெர்மனியின் போக்கு முற்றாக சிதைத்து மாற்றப்பட்டதற்கும் ஹிட்லரின் தனிப்பட்ட தவறான குணங்களும் சீரற்ற பழக்க வழக்கங்களும் கூட காரணமாக அமைந்தன.

ஹிட்லரின் இறுதிக்காலத்தில் அவரது உடல்நிலை சீர்கெட்டு மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் சரிவர சிந்தித்துச் செயல்பட முடியவில்லை. இவை அனைத்துமே சிதைந்து போன மனநிலையின் வெளிப்பாடுகள்தாம்.

குதிரைகள் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட வெறுப்பினால், ஜெர்மன் ராணுவத்தின் குதிரைப் படையையே அவசரம் அவசரமாகக் கலைத்தார். ராணுவ வீர்ர்களுக்கு வெறியேற்றும் போதை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து கொடுத்து வரச் செய்தார். இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்த உச்சக்கட்டக் காலத்தில் குழந்தைகளையும் சிறுவர்களையும் கூட துரத்திப் பிடித்து ராணுவத்தில் சேர்த்தார். ராணுவம் மட்டுமே நம்பிக்கைக்குரிய அமைப்பாக அவருக்குத் தோன்றியதில் வியப்பேதுமில்லை.

முரண்களின் மொத்த வடிவம்

இவை தவிர, ஹிட்லரின் வேறு சில குணநலன்களும் கூட மிகவும் விசித்திரமானவை. அவர், முன்னோர்களை வணங்குவதிலும் வழிபடுவதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். இறந்து போன தன் தாயின் அழகிய உருவப்படத்தையும், தான் மிகவும் நேசித்த சகோதரியின் மகள் கெலி ராபுலின் உருவத்தையும் செதுக்கி வைத்து வழிபட்டார். ஹிட்லர் ஒரு சிறந்த ஓவியருமாவார். 1913-ம் ஆண்டில் அவர் வரைந்த ‘தாயும் சேயும்’ என்ற ஓவியம் மிகவும் பிரசித்திப் பெற்றது. முரண்களின் மொத்த வடிவமாகவும் அவர் இருந்தார் என்பதற்கு இவை அனைத்தும் அத்தாட்சிகள்.

சோதிடம், கடவுள் அருள் போன்றவற்றின் மீதும் கூட அவருக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. பைபிளில் இருந்து பல சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உருப்போடுவதும் அவரது வழக்கமாக இருந்தது.

தன் காதலி இவாப்ரான் மீது அளவில்லா பாசம் கொண்டிருந்தார். பெண்களிடம் பொதுவாகவே கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் மென்மையாகவும் நடந்து கொண்டார். ஆரம்ப காலத்தில் புலால் உண்ணும் பழக்கம் ஓரளவு இருந்ததும் உண்மை, ஆனால், பிற்காலத்தில் முழுக்க முழுக்க மரக்கறி உணவையே அவர் விரும்பி உண்டார். ஆனால், உண்பது சாத்வீகமான உணவு என்று சொல்லப்பட்டாலும், அவருடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ‘மிலிட்டரி’ தன்மையே மேலோங்கி இருந்தது. தன் இடது கையில் ஸ்வஸ்திகா சின்னம் அணிந்து கொள்வதில்  அலாதி விருப்பம் கொண்டிருந்தார். சித்திர வேலைப்பாடுகளிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் கேளிக்கைகளிலும் பியானோ இசையைக் கேட்பதிலும் விசில் அடிப்பதிலும் அதீத பிரியம் கொண்டிருந்தார்.

ஹிட்லர் தான் எழுதிய ‘மெயின் காம்ஃப்’ நூலில் ‘சிறந்த எழுத்தாளனை விட சிறந்த பேச்சாளனே மக்களை அதிகமாகக் கவர்கிறான்’ என்றும், ‘உலகில் பெரும் புரட்சிகளும் சம்பவங்களும் பொதுவாகச் சிறந்த பேச்சாளர்களாலேயே ஏற்படுகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடால்ஃப் ஹிட்லரும் அசாத்தியமான பேச்சாற்றல் கொண்டவர்தான். பாமர மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கொச்சையான சொற்களையே தன் பேச்சிலும் அடிக்கடி அவர் பயன்படுத்தினார். இது அவருக்குப் பக்க பலமாக அமைந்திருந்தது. முக்கியமாக அவருடைய பேச்சு பெண்களைப் பெரிதும் கவரக்கூடியதாக இருந்தது.

பேச்சில் நிதானம், பேசும்பொழுது பொது மக்களை நோக்கிக் கேள்விகளை எழுப்புவது, முக பாவத்தை மாற்றிக் கொள்வது, கண்களில் தீப்பொறி பறக்கப் பேசுவது, முஷ்டியை உயர்த்தியும் தாழ்த்தியும் இறுக்கியும் வைத்துக் கொண்டு பேசுவது, மற்றவர்களைப் போல் குரலை மாற்றிப் பேசுவது, பைபிள் மேற்கோள்களைத் தன் பேச்சில் எடுத்தாள்வது போன்றவையும் கூட ஹிட்லரின் தனிச்சிறப்புகளாகச் சொல்லப்படுபவை.

பொது மக்களுடனான தொடர்பு

கூட்டம் நடைபெறும் இடங்களில் இரண்டு தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கிருக்கும் ஹிட்லரின் செயலாளர்கள், உடனுக்குடன் ‘கூட்டத்தில் பொது மக்களின் எண்ணிக்கை, அவர்களின் மனோநிலை’ போன்ற ’துல்லியமான’ புள்ளி விவரங்களை ஹிட்லருக்குத் தெரிவிப்பார்கள். அந்தச் சூழலுகேற்றாற்போல் ஹிட்லர் தன் உரையினைத் தேவையான அளவுக்கு மாற்றங்களுடன் தயார் செய்து கொண்டு வந்து பேசுவார்.

கூட்டத்திற்கு எப்பொழுதும் சற்றுக் காலம் தாழ்த்தியே வருவதும் அவருடைய வழக்கம். பேச்சு முடிந்த பின்பு ஜெர்மானிய ’தேசிய கீதம்’ பாண்டு வாத்தியத்தில் வாசிக்கப்படும். அந்த வாத்திய ஒலி முடிவதற்கு முன்னதாகவே, ஹிட்லர் தன் காரில் ஏறிக் கிளம்பி விடுவார். மற்ற அதிகாரிகளும், பொது மக்களும் அந்த இசை முடிந்த பின்பே அவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்பது ஹிட்லரின் மிக முக்கியமான கட்டளைகளில் ஒன்று. பொது மக்களுக்கான சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் எதுவும் அவரைக் கட்டுப்படுத்தாது.

பொதுவாகவே பேச்சு முடிந்த பின்னர், அவர் யாருக்கும் பேட்டி அளிப்பதென்பதெல்லாம் கிடையாது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்று புகழின் உச்சத்தில் இருந்தபோதும், ஐந்து நிமிடப் பேட்டிக்கு ஏறத்தாழ மூவாயிரம் பவுண்டுகள் வரை அவர் பெற்றுக் கொண்டிருக்கிறார். அது நம் ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 51,000 ரூபாய்கள்.

வெறியேற்றும் உன்மத்தப் பேச்சு

கூட்டத்தின்போது தவறாமல், பழுப்பு நிற மேல் கோட்டும் குல்லாயும் அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு பிரம்பையும் வைத்திருப்பாராம். போர் வீர்ர்களுக்கு ஹிட்லரின் பேச்சு என்பது ஒரு வரப்பிரசாதம். அவருடைய சிறு சிறு வாக்கியங்கள் கூட உணர்ச்சி நிரம்பியவை; அவர்களுக்கு ஊக்கம் தருபவை; வெறி கொண்ட உள்ளத்திற்கு உரமூட்டுபவை; இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் போர் வெறியை மட்டுமே முதன்மைப்படுத்திய ஹிட்லரின் பிரசித்தமான சில மேற்கோள்கள் இவை…

“எட்டு மில்லியன் ஜெர்மானியர்கள் தங்களுடைய உரிமையைப் பெற்றேயாக வேண்டும்.

“இன்று ஜெர்மனி; நாளை இவ்வுலகம்”

”இதயத்தில் கிஞ்சிற்றும் இரக்கம் கொள்ளாதீர்கள்”

“கொடூரமாகச் செயல்படுங்கள்”

மனிதர்களின் குணநலன்கள் எப்போதும் மாறுவதில்லை. காலந்தோறும் சிலரிடம் அந்த குணாதிசயங்கள் படிந்து போவதும் உண்டு. உலக வரலாற்றில் கொடூரத்தின் உச்சம் ஹிட்லரின் நடவடிக்கைகளும் மனிதத்தன்மையற்ற செயல்களும். ஹிட்லரின் அதே குணாதிசயமும் கொடூர மனப்பான்மையும் இப்போதும் சிலருக்குப் பொருந்துகிறது.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்ட வரைவு மசோதாவைக் கிழித்தெறிந்து அமித் ஷாவின் முகத்தில் வீசிய அஸாதுதீன் ஒவைஸி இவ்வாறு குறிப்பிட்டார்:

’ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டு வந்த பிரிவினைச் சட்டங்களைக் காட்டிலும் இந்த மசோதா மோசமானது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’.

ஒவைஸியின் இந்தச் சொற்கள் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

 

 

 

பா.ஜீவசுந்தரி,

தொடர்புக்கு: asixjeeko@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *