- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இணையதளத்தில் பணம் செலுத்தினால் வீடு தேடி வரும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை

சென்னை, மார்ச் 30-
புதிய வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர்கள், இருந்த இடத்திலிருந்தே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுப்பித்துக்கொள்வதற்கு

தொலைந்து போன வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெறவும், கருப்பு-வெள்ளையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையை வண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும், அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படத்தினை அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது வாக்காளர் அடையாள அட்டையை வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆன்லைனில்

இதன்படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற விரும்பும் வாக்காளர், இருந்த இடத்திலிருந்தே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமாக, தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் (www.elections.tn.gov.in) ஆன்லைன் மூலமாக 001 என்ற படிவத்தினை பூர்த்தி செய்து உரிய தொகையை ஆன்லைனில் செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டைக்கு மட்டும் ரூ.25 பணம் செலுத்தினால், தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் வசதியாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தங்கள் இருப்பிடத்திற்கே அடையாள அட்டை வர வேண்டும் என விரும்புபவர்கள், கூடுதலாக தபால் செலவு ரூ.40 மற்றும் இதர செலவாக ரூ.2 சேர்த்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் செலுத்த வேண்டும். இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியால் நேற்று ஸ்டேட் வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்  லக்கானி, ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான  தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு ஆகியோர் ைகயெழுத்திட்டனர். இந்த திட்டம் இன்று(30-ந் தேதி) முதல் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த புதிய வசதியின்படி, வாக்காளர் அடையாள அட்டைக்கான கட்டணத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி செலுத்தலாம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply