- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

இணையதளங்களில் பெண்களின் ஆபாச படங்கள் வருவதை தடுக்க கோரி வழக்கு

சென்னை, ஏப்.6-
இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளை தடுக்க கோரி தாக்கல் செய்த வழக்கிற்கு பதில் தருமாறு கூடுதல் டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆபாச படங்கள்
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இணையதளத்திற்கு சென்றாலே இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் இளம்பெண்களின் நிர்வாணம் மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இணையதளம் மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இவ்வாறு ஆபாச காட்சிகளை இணையதளங்களில் வெளியிடுவதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் எண்ண ஓட்டங்கள் சிதறும்.
மேலும் இதுபோன்ற இணையதளங்கள் இளைஞர்களை பாலியல் உணர்ச்சியை தூண்டும் வகையில் உள்ளது. நல்ல மனநிலையில் உள்ள ஆண்கள், பெண்கள் என எல்லோரையும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது. இதன் மூலம் பாலியல் தொழில் இடைத்தரகர்களும், பணத்திற்காக உடலை விற்கும் பெண்களும் வெளிப்படையாகவே இளைஞர்களை தங்களது வலையில் எளிதாக சிக்க வைக்கின்றார்கள்.
நடவடிக்கை
இணையதளம் மூலம் பரவும் இந்த பாலியல் தொழிலால் சமூகமே சீரழிந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 67ன் படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே இதுபோன்ற ஆபாச காட்சிகள் கொண்ட விளம்பரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இளைஞர்களை பாலியல் தொழிலில் தூண்டும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆன் லைன் மூலம் ஆபாச விளம்பரங்களை தடை செய்யவும், பாலியல் தொழில் இடைத்தரகர்கள் மீத நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், விமலா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் மனுதாரர் கூறியபடி போலீசாருக்கு எந்த மனுவும் வரவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும் இந்த விஷயத்தை அரசு கவனிக்கும் என்று கோர்ட்டில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கிற்கு கூடுதல் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. 3 வாரத்திற்குல் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 21ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply