- செய்திகள், மாநிலச்செய்திகள்

இணைப்பு கழன்றதால் விபரீதம் ஓடும்போது, 3 முறை இரண்டாக பிரிந்த எக்ஸ்பிரஸ் ரெயில்

ஜெய்ப்பூர், மார்ச் 8-

இணைப்பு கழன்றதால், ஓடிக்கொண்டு இருந்தபோதே எக்ஸ்பிரஸ் ரெயில்  3 முறை இரண்டாக பிரிந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினார்கள்.

தனியாக பிரிந்த ரெயில்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் செல்லும் இன்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

கோதன் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென்று இணைப்பு கருவி (கப்ளிங்) கழன்றதால், அந்த ரெயிலின் என்ஜினும் இரண்டு பெட்டிகளும்  தனியாக பிரிந்து சென்றன. இதனால் என்ஜின் இல்லாமல் ஓடிய மற்ற பெட்டியில்  இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

பயணிகள் தப்பினர்

கழற்றிவிடப்பட்ட அந்த பெட்டிகள் சிறிது தூரம் வேகமாகச் சென்று, பின்னர் தானியங்கி பிரேக்கினால் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் பெட்டிகள் மீண்டும் என்ஜினுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இருப்பினும், இதே போல் ரென் மற்றும் ஜல்சு ஆகிய இரு ரெயில் நிலையங்களிலும் அந்தப் பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றன. அதிர்ஷ்டவசமாக 3 முறை நடந்த விபத்திலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இந்த தொடர் விபத்து காரணமாக, 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3.10 மணிக்கு அந்த ரெயில் ஜெய்ப்பூர் போய்ச் சேர்ந்தது.

Leave a Reply