- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் 20-ந் தேதி வரை சட்டசபை சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு

சென்னை, பிப். 17-
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அத்துடன் நேற்றயை சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, சபாநாயகர் ப.தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவாதம்
வரும் 20-ந் தேதி சனிக்கிழமை வரை சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை(இன்று) காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர் இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும்.
18 மற்றும் 19 ஆகிய நாட்களிலும் பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிவடைந்து 20-ம் தேதி 2015-16ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் பேரவையில் அளிக்கப்படும். பின்னர், 2016-17ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை இடம்பெறும்.
வாக்கெடுப்பு
இறுதி துணை பட்ஜெட்டில் உள்ள மானியக்கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். மானியக் கோரிக்கைகளுக்கான நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். 2016-17ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக்கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். 2016-17ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக்கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இது தவிர அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகின்றன.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

Leave a Reply