- உலகச்செய்திகள், செய்திகள்

‘இங்கிலாந்து, ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவோம்’ ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்

லண்டன், ஏப்.6:- பாரீசில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று, இங்கிலாந்து, ஜெர்மனி, ரோமில் தாக்குதல் நடத்துவோம் என, புதிய வீடியோ மூலமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர் பின்னடைவு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் உச்ச கட்டத்ைத எட்டியுள்ளது. அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுடன் சிரிய அரசு ஏற்படுத்திய அமைதி உடன்படிக்கையை தொடர்ந்து, ராணுவத்தின் முழு கவனமும், ஐ.எஸ். தீவிரவாதிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதன் விளைவாக, சிரியாவில் தீவிரவாதிகளின் வசம் இருக்கும் முக்கிய நகரங்கள் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.

மிரட்டல்

குறிப்பாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புராதான நகரமான பால்மைரா, அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், இங்கிலாந்து நாடாளுமன்றம் மற்றும் இங்கிலாந்தின் சின்னமாக விளங்கக் கூடிய ஈபிள் டவர் ஆகியவை, நொறுக்கப்பட்டு கிடப்பதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாரீஸ் மற்றும் பிரஸ்சல்சில் நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோ காட்சிகளையும் தீவிரவாதிகள் இணைத்துள்ளார்கள்.

நிபந்தனைகள்

வீடியோவில் பேசும் தீவிரவாதி, ‘‘ நேற்று பாரீஸ் தாக்கப்பட்டது என்றால், நாளை அது லண்டனாகவும் இருக்கலாம். அல்லது (ஜெர்மனி தலைநகர்) பெர்லினாகவும் இருக்கலாம்; அல்லது ரோம் நகரம் தாக்கப்படலாம். இந்த மூன்று நாடுகளுக்கு இந்த செய்தி விடுக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய விதிமுறைகள் குறைவானதுதான். ஒன்று முஸ்லிமாக நீங்கள் மாறி விட வேண்டும். அல்லது எங்களுக்கு கப்பம் கட்ட வேண்டும்; அல்லது போரிட்டு சாக வேண்டும். எங்களது வீரர்கள் பாரீஸ் நகர வீதிகளுக்குள் புகுந்து முஸ்லிம் அல்லாதவர்களை கொன்று குவித்தார்கள். இது ஒரு எச்சரிக்கை செய்யும் சம்பவம் மட்டும்தான்.’’ என்று பேசியுள்ளார்.

‘ஐ.எஸ். தீவிரவாதிகளின் கையில் எந்தவொரு ஆயுதம் கிடைத்தாலும், அதை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள்’ என, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், கடந்த வாரம் எச்சரிக்கை செய்திருந்தார். இந்த நிலையில்தான், ஐ.எஸ். தீவிரவாதிகளுடைய மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரீசில் தாக்குதல் நடத்தினர். இதில் 130 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இங்கிலாந்து ராணுவம் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இதேபோன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply