- உலகச்செய்திகள், செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி

காபூல், ஏப்.6-
ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.
தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடமேற்கில் பர்வான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மர்மநபர் ஒருவன் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீசார் பின்தொடர்ந்தனர். தன்னை போலீஸ் துரத்துவதை உணர்ந்த அவன், மோட்டார் சைக்கிளின் வேகத்தை இன்னும் அதிகரித்தான்.
6 பேர் பலி

இதற்கிடையில் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். குண்டு வெடிப்பு நடந்த பகுதியின் அருகே பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். போலீஸ் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார்.

22 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறி உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு, ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலிபான்கள் ஆதிக்கம்

ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பர்வான் மாகாணத்தின் போலீஸ் தலைவர் முகம்மது ஜாமன் மமோசாய் நிருபர்களிடம் கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றவில்லை. இதுவரை காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலமை மோசமாக இருப்பதாக, சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படையினர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியேறினர். அன்றில் இருந்து தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட தொடங்கினர். கடந்த பிப்ரவரி மாதம் சிகாத் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 4 போலீசார் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
————

Leave a Reply