- உலகச்செய்திகள், செய்திகள்

ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் பலி; 300 பேர் காயம்

 

காபூல், ஏப், 20:-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரியை ஓட்டிவந்து தலிபான் தீவிரவாதி வெடிக்கச் செய்ததில் 28 பேர் உடல் சிதறி பலியானார்கள், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான்- தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே அமைதிப்பேச்சை நடத்துவதற்கு உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து மீண்டும் தங்கள்  தாக்குதல் தொடரும் என சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள புல் இ முகமது பகுதி மிகவும் பரபரப்பு மிகுந்த பகுதியாகும். இங்கு பள்ளிகள், மசூதிகள்,பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சக அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், அரசு பாதுகாப்புத்துறையின் கட்டிடம் அருகே ம் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு நேற்று காலை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை தலிபான் தீவிரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு ஓட்்டி வந்து வெடிக்கச் செய்தார்.

பயங்கர சப்தத்துடன் லாரியும், தீவிரவாதியும் வெடித்துச் சிதறியதில், அந்தப்பகுதியே அதிர்ந்து, கட்டிடங்கள் குலுங்கின. . இந்த வெடிகுண்டு தாக்குதலில் அந்த இடத்திலேயே 28 பேர் உடல்சிதறி பலியானார்கள், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலைப் பயன்படுத்தி அரசு பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடத்துக்குள் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினார். இதற்கு பாதுகாப்புபடையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின், அந்த தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது குறித்து  காபூல் போலீஸ் தலைவர் அப்துல் ரஹிமி கூறுகையில், “ பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்துக்கு அருகே ஒரு தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய லாரியை வெடிக்கச்செய்தான். இந்த தாக்குதல் சம்பவத்தில் 28 பேர்பலியானார்கள், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.'' என்று தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அதிபர் அஸ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காபூலில் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக போராடிவரும் எங்கள் படை வீரர்களின் தைரியத்தையும், உறுதியையும் இதுபோன்ற தாக்குதல் மூலம் குலைக்கமுடியாது''  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply