- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் வாகன சோதனையில் பரபரப்பு செம்மரம் வெட்ட வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு

திருப்பதி,பிப்.13:-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் லாரியில் செம்மரங்கள் வெட்ட வந்த தமிழக கூலித்தொழிலாளர்களை பிடிக்க போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து தப்பியோடி  தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யபட்டனர்.

சிறப்பு போலீசார்

ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்னூல் மாவட்ட வனப்பகுதிகளில் நடைபெறும் செம்மர கடத்தலை தடுக்க அந்த மாநில அரசு ஐ.பி.எஸ் அதிகாரி காந்தாராவ் தலைமையில் சிறப்பு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடப்பா மாவட்டம் கடப்பா ராயசோட்டி சாலையில் சின்னமண்டியம் பகுதியில் வீரபள்ளி எஸ்.ஐ பக்தவச்சலம் தலைமையில் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனைக்காக போலீசார் நிறுத்தினர்.

2 முறை துப்பாக்கி சூடு

அப்போது லாரியில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்ப முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக எஸ்.ஐ பக்தவச்சலம் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் வனப்பகுதிக்குள் தப்ப முயன்ற 27 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் செம்மரங்கள் வெட்ட வந்த கூலித்தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் சிலர் தப்பி ஓட்டம்
இதைதொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கூலித்தொழிலாளர்கள் கற்களை கொண்டு தாக்கியதில் எஸ்.ஐ பக்தவச்சலம் மற்றும் போலீசார் சந்தோஷ் ெரட்டி லேசான காயம் அடைந்தனர்.

Leave a Reply