- செய்திகள்

ஆந்திர அரசு கைது செய்துள்ள 32 தமிழர்களை ஜாமீனில் கொண்டு வர வேண்டும் காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்…

சென்னை, ஆக. 9-
ஆந்திர போலீசார் சமீபத்தில் கைது செய்துள்ள 32 தமிழர்களை ஜாமீனில் கொண்டு வர முழு முயற்சிகள் செய்திட வேண்டும் என்று, காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இது தொடர்பாக, காந்திய மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நன்றி-வேண்டுகோள்
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 32 தமிழர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் சித்தூர் சிறையில் அடைக்கப்பபட்டு உள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவிகள் வழங்கிட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவர்களை ஜாமீனில் கொண்டு வர முழு முயற்சிகள் செய்திட வேண்டுமென்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
கவலை
உரிய ஆதாரங்கள் இன்றி அப்பாவித் தமிழர்களை கைது செய்வததென்பது ஆந்திர காவல் துறைக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இவ்வாறு கைது செய்யப்பட 20 தமிழர்கள் போலி என்கவுண்டர் மூலம் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதும், அந்தப் படுகொலைகளுக்கான நியாயம் வழங்கப்படாமல் இன்னும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதும் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர் கைது செய்யப்பட 450 தமிழர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆந்திர மாநில நீதிமன்றம் விடுதலை செய்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விடுதலை
எனவே, அப்பாவித் தமிழர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையிலடப்பதை விடுத்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆந்திர அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply