- செய்திகள்

ஆந்திர அரசின் சார்பில் சிந்துவுக்கு பாராட்டு விழா 'சிந்து எங்களின் மகள்' சந்திரபாபு நாயுடு பெருமிதம்…

விஜயவாடா, ஆக.25-
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு ஆந்திர அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அவரை எங்களின் மகள் என்று ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு பெருமையோடு கூறினார்.
பாராட்டு விழா

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 21 வயதான பி.வி.சிந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறார். அவருக்கும், பயிற்சியாளர் கோபிசந்துக்கும் தெலுங்கானா மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருவரும் 2 அடுக்கு பஸ்சில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். சிந்துவுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வழங்கினார். அத்துடன் ‘சிந்து எங்கள் மண்ணின் மகள்’ என்று பெருமிதத்தோடு கூறினார்.

சந்திரபாபு நாயுடு

தெலுங்கானா பிரிவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அணிக்காக பி.வி.சிந்து விளையாடி இருக்கிறார். இதனால் சிந்து தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என்று ஆந்திர மாநில அரசும் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறது. சிந்துவுக்கு ரூ.3 கோடி மற்றும் 9 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை வழங்குவதாக ஆந்திர அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த் இருவருக்கும் ஆந்திர அரசு சார்பில் நேற்று விஜயவாடாவில் பாராட்டு விழா நடந்தது. இதையொட்டி இருவரும் ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் விஜயவாடா சென்றனர். விமான நிலையத்தில் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர்.

மேளம், தாளம் முழங்க…

மேளம்-தாளம் முழங்க ஊர்வலமாக பாராட்டு விழா நடந்த இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். விழாவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு வைரக்கல்லாக மின்னும் சிந்து, மேலும் முன்னேற்றம் அடைய எல்லா உதவிகளையும் அரசு செய்யும். ‘சிந்துவின் தந்தை எலுருவை சேர்ந்தவர். தாயார் விஜயவாடாவில் பிறந்தவர். இருவரும் கைப்பந்து விளையாடியவர்கள்.

சிந்து எங்களின் மகள்

சிந்து மகத்தான சாதனையை படைத்து உயரிய நிலையை எட்டியதற்கு, பெற்றோரின் ஊக்கமும், ஆதரவுமே காரணம். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்’. ‘சிந்து எங்களின் மகள்’ ஆந்திர மாநிலத்தின் தலைநகராக உருவாகும் அமராவதியில் கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமி அமைக்க 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.

எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவுக்கு வர வேண்டும். அது நமது விளையாட்டு வீரர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். சீனா, ரஷியாவை விட நம்மிடம் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஆந்திர அரசு அமராவதியில் அமைக்க தயாராக இருக்கிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

நன்றி

வெள்ளி மங்கை சிந்து பேசும் போது, கூறியதாவது:

சிறு வயதில் விஜயவாடாவுக்கு வந்து இருக்கிறேன். இங்கு எனது தாத்தா வீட்டில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பேட்மிண்டன் விளையாடி இருக்கிறேன். நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு உங்களின் ஆசீர்வாதமும், பிரார்த்தனையும் தான் காரணம். அதற்கு எனது நன்றி இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பட்டம்

ஆந்திர பல்கலைக்கழகம் சார்பில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிவரை முன்னேறிய பேட்மிண்டன் வீரர் குண்டூரை சேர்ந்த ஸ்ரீகாந்துக்கு ரூ.25 லட்சமும், குரூப்-2 நிலையில் அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு அறிவித்து இருக்கிறது. அத்துடன் செஸ் கிராண்ட்மாஸ்டர் கோனரு ஹம்பி, கோபிசந்தின் மனைவியும், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனையுமான ஸ்ரீலட்சுமி ஆகியோரும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

Leave a Reply