- மாநிலச்செய்திகள்

ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஜெகன்மோகன் ரெட்டி தகவல்

சாமி சிலைகள் சேதப்படுத்துவதை தடுக்க ஆந்திராவில் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு போலீசாருக்கான முதல் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் திருப்பதி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. பயிலரங்கை முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் விஜயவாடா முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஆந்திராவில் அரசியல் ஆதாயத்திற்காக கோவில் சிலைகள், கோபுரங்கள் என உடைத்து வருகின்றனர். இதுவரை எப்போதும் இல்லாத வகையில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோவில்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள் தொடக்க விழாவின்போது ஏதோ ஓர் இடத்தில் கோவில் சிலைகளை உடைத்து திசை திருப்பும் விதமாக சிலர் ஈடுபடுகின்றனர்.

அரசியல் ஆதாயத்திற்காக கடவுளை கூட விட்டு வைக்கவில்லை. ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இரவு நேரத்தில் சிலைகளை உடைத்து மறுநாளே அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற தவறுகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply