- செய்திகள், தேசியச்செய்திகள்

ஆடை கட்டுப்பாடு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரிம்பகேஷ்வர் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு

நாசிக், ஏப்.22:-
ஆடை கட்டுப்பாடு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் திரிம்பகேஷ்வர் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கோரிக்கை

மராட்டிய மாநிலம் சனி சிங்னாப்பூரில் உள்ள சனி பகவான் கோவிலின் மையப்பகுதி வரை ெசன்று வழிபாடு நடத்துவதற்கு 400 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு பாரம்பரியமான தடை இருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 8-ந் தேதி முதல், அந்த தடை அகற்றப்பட்டது.

அதேபோன்று, 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாக கருதப்படும், மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள திரிம்பகேஷ்வர் கோவிலிலும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்துவதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

போராட்டம்

அந்த கோரிக்கையுடன் புனேவைச் சேர்ந்த ‘சுவராஜ்ய மகிளா சங்கதனா’ தலைவர் வனிதா கட்டே தலைமையில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
எனவே, கோவிலின் கருவறைக்குள் வழிபாடு நடத்துவதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரை பெண்களை அனுமதிக்கலாம் என்று அறக்கட்டளை முடிவு செய்தது. ஆனால், வழிபாடு நடத்த வரும் பெண்கள் ஈரமான காட்டன் அல்லது பட்டுத் துணிகளை அணிந்து வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதற்கு பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு

கடந்த 14-ந் தேதி வனிதா கட்டே தலைமையில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் ஆடை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டனர். இதுதொடர்பாக கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நேற்று முன்தினம், அந்த கோவிலுக்கு மீண்டும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் வழிபாடு நடத்துவதற்கு வந்தனர். இந்த தடவை கோவில் அறக்கட்டளை விதித்துள்ள ஆடை கட்டுப்பாடுகளின்படி வந்தபோதிலும், அவரக்ளைச் சிலர் தடுத்து விட்டனர். இதுதொடர்பாக திரிம்பகேஷ்வர் நகராட்சியின் முன்னாள் தலைவர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண்கள் வழிபாடு

எனவே, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 6 மணி அளவில் வனிதா கட்டே தலைமையில் பெண்ணுரிமை ஆர்வலர்கள் 4 பேர் அந்த கோவிலுக்கு வந்தனர். கோவில் நிர்வாகம் விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டின்படி ஈரத் துணியுடன் வந்து இருந்த அவர்கள் 4 பேரும் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தினார்கள். அவர்களுடைய வருகையை முன்னிட்டு கோவிலைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வழிபாடு நடத்தியது பற்றி நிருபர்களிடம் கட்டே கூறுகையில், ‘‘கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கோவில் நிர்வாகம் கூறியுள்ள ஆடை கட்டுப்பாடுகளின்படி, ஈரமான காட்டன் மற்றும் பட்டு உடைகளை அணிந்து வந்து இருந்தோம். கோவிலின் அறங்காவலர்களால் நாங்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டோம்’’ என்று தெரிவித்தார்.

போராட்டம்

இதனிடையே, பெண்ணுரிமை ஆர்வலர்களை தடுத்த விவகாரம் தொடர்பாக சில கிராமத்தினருக்கு எதிராக போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, நேற்று நாசிக் நகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அந்த பகுதி மக்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால், அந்த நகரில் உள்ள ஏராளமான கடைகள் மற்றும் விடுதிகள் அடைக்கப்பட்டு இருந்தன.

—————-

Leave a Reply