- செய்திகள்

ஆடி கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் திருப்போரூர் முருகன் கோவிலில்…

திருப்போரூர், ஜுலை.29-
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற ஆடிகிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவடி எடுத்து
அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமான் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெளியூர்களிலிருந்து வருகைேதந்த பக்தர்கள் அதிகாலையில் சரவணப் பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டைஅடித்து, காவடி எடுத்து மாடவீதி வலம் வந்தனர்.
1 லட்சம் பக்தர்கள்
சாமி தரிசனம் செய்வதற்கு வெளியூர்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையையொட்டி நேற்று சுமார் 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரம் டி.எஸ்.பி. சேகர் மேற்பார்வையில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தார்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பலமணிநேரம் வரிசை
திருப்போரூர் முருகன் கோவிலில் கிருத்திகை மற்றும் விஷேச தினங்களில் வெளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பலமணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள், கைக்குழந்கைகளுடன் வரிசையில் நிற்பவர்கள் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வசதி படைத்தவர்கள்
கட்டண தரிசனத்தில் செல்பவர்கள் சிறப்பு தரிசனவழியாக செல்லும்போது நிர்வாக தரப்பில் ஒழுங்கு படுத்தாத காரணத்தால் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டியது 3 அல்லது 4 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டியநிலை உள்ளது. இறைவன் சன்னதியில் வசதி படைத்த பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே சாமி வழிபாடு செய்ய முடியும் என்ற அவலத்தை கோவில் நிர்வாகத்தினர் சரிசெய்தாலே போதும் என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

படம் உள்ளது.

Leave a Reply