- செய்திகள்

ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் திருவண்ணாமலை கோவிலில் இன்று…

திருவண்ணாமலை, ஜுலை 27-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இன்று கொடியேற்றம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு  ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அம்மன் சன்னதி எதிரிலுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழா முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

அம்மனுக்கு வளைகாப்பு விழா

அதில் உண்ணாமலையம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் ஒரே விழா ஆடிப்பூர பிரமோற்சவம் என்பது விசேஷமானது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் நிறைவாக வருகிற 5-ந் தேதி காலை கோவில் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடைபெறும்.

தீமிதி விழா
மேலும் அன்றிரவு காமதேனு வாகனத்தில் வீதியுலா, நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீமிதி விழாவும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply