- செய்திகள், விளையாட்டு

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, சிந்து சாதிப்பார்களா ?

உஹான், ஏப். 27:-

சீனாவின் உஹான் நகரில் இன்று தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஜூவாலா கட்டா, அஸ்வினி, ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக, நடக்கும் கடைசி சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால், இதில் சாம்பியன் பட்டம் வென்று புள்ளிகளைப் பெற்றால் இந்தியர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறலாம்.

சாய்னா

நட்சத்திர வீராங்கனையும், தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள சாய்னா நேவால், கனுக்கால் காயத்திலிருந்து மீண்டு, சுவிஸ் ஓபன், இந்தியா ஓபன், இந்தோனேசிய ஓபன் ஆகிய போட்டிகளில் பங்கேற்றார். ஆனால், அனைத்திலும் அரையிறுதியோடு வெளியேறினார். எனினும், இப்போட்டியில் சாய்னா சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதல்சுற்றில், மகளிர் ஒற்றையர்பிரிவில் இந்தோனேசியாவின் பிட்ரியானியுடன் மோதுகிறார்.

சிந்து

தரவரிசையில் 10-ம் இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, இதற்கு முன் நடந்த சுவிஸ் ஓபன், இந்தியா ஓபன், மலேசிய ஓபன், சீனா மாஸ்டர்ஸ் உள்ளிட்ட  போட்டிகளில் காலிறுதிக்கு மேல் தாண்டவில்லை. அந்த தடைகளை தகர்த்து, இந்த போட்டித் தொடரில் சாதிப்பார் என்று நம்பலாம். மகளிர் ஒற்றையர் முதல்சுற்றில் இந்தோனேசிய வீராங்கனை  மரியா பீபி குஷ்மஸ்துகியை எதிர்கொள்கிறார்.

ஸ்ரீகாந்த்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 13-ம் இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த போதிலும், இதற்கு முன் நடந்த பல சர்வதேச போட்டிகளில் முதல்சுற்றோடு வெளியேறி இருக்கிறார். இந்த போட்டியில் முதல் சுற்றில் கொரிய வீரர் லீ டாங் கியுனுடனை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

மேலும், இரட்டையர் பிரிவில் மனு அட்ரி, சுமீத் ரெட்டி முதல் சுற்றில் ஜப்பானின் ஹிரோயுகி என்டோ , கெனிச்சி ஹயாகாவா ஜோடியை எதிர்கொள்கிறார்கள். மகளிர் இரட்டையர் பிரிவில்  கொரியாவின் சாங் யி நா , லீ சோ ஹீ ஜோடியுடன் மோதல் நடத்துகிறது இந்திய வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி.

Leave a Reply