- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கும் முனைப்பில் இந்தியா

மிர்பூர், மார்ச் 1:-

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கும் முனைப்பில் இன்று களம் இறங்குகிறது.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தை 45 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியதுள்ளது

இதனிடையே இந்திய அணி 3–-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர்கொள்கிறது.  இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்கும் முனைப்பில் இன்று களம் இறங்குகிறது.

மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கும் முன்னேறிவிடும்.

சமீபத்தில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடியதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் இலங்கையை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது இந்தியா.

மேலும் பேட்டிங்,  பந்துவீச்சில் இந்திய வலுவான நிலையில்தான் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் வித்திட்டார். ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக விளையாடுகிறார்.

தொடக்க வீரர் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்தார். முகமது அமீர் வீசிய பந்தில் கால்விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கைக்கு எதிராக ஆடுவாரா என்பது சந்தேகமே. ஏற்கனவே மகேந்திர சிங் தோனி காயத்தில் உள்ளார். அவர் அதில் இருந்து குணமடைந்து வருகிறார். உடல் தகுதியை பொருத்து யார் ஆடுவார்கள் என்பது தெரியும்.

வேகப்பந்தில் நெக்ரா, பும்ராவும், சுழற்பந்தில் அஸ்வின், ஜடேஜாவும் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை இந்தியா எட்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில்மட்டும்தான் தோற்றுள்ளது.

ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் காயம் காரணமாக களம் இறங்கமுடியாமல் போனால் பார்திவ் படேல், ரஹேனா ஜோடி கூட துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. பார்திவ், தான் விளையாடிய 20 ஓவர் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளது குறுப்பிடத்தக்கது.

மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வெற்றி நெருக்கடியில் உள்ளது. முன்னதாக நடந்த ஆட்டத்தில் அந்த அணி வங்கதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுவிடும். பலவீனத்துடன் காணப்படும் இலங்கை அணி வெற்றி பெற மிகவும் கடுமையாக போராடும்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் தற்போதைய கேப்டன் மாத்யூஸ், காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் மலிங்கா விளையாடுவாரா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் 9 முறை 20 ஓவர் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

–இந்தியா: தோனி (கேப்டன்), ஷிகர் தவாண், ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஆசிஷ் நெஹ்ரா, ரகானே, ஹர்பஜன் சிங், பவன் நெகி, பார்திவ் படேல்,   புவனேஸ்வர் குமார்.

இலங்கை- மலிங்கா (கேப்டன்), தில்ஷான், சந்திமால், ஜெயசூர்ய,  மேத்யூஸ், கபுகேந்திரா, குலசேக, தஷுன் சனகா, சமீரா, சிறிவர்த்தனே,  ஹெரத், டிக்வெல்லா, பெரேரா, ஜெப்ரி, சேனநாயகே.

Leave a Reply