- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அ.தி.மு.க.வில் 32 மாவட்டங்களுக்கு நேர்காணல் முடிந்தது

சென்னை, ஏப். 1-
அ.தி.மு.க.வில் இதுவரை 32 மாவட்டங்களுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஆர்வம்

அ.தி.மு.க. வில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான 2-ம் கட்ட நேர்காணல் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. சென்னை போயஸ்கார்டனில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் நேர்காணல் தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே வேட்பாளர்களிடம் நேரடியாக நேர்காணல் நடத்துவதால்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேர்காணலில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் 11 வது நாளான நேற்று காலை  11.30 மணிக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விடுபட்ட தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்தவர்கள் அழைப்பு கடிதத்துடன் வந்திருந்தனர். பெண்கள் பச்சை நிற சேலை அணிந்தும், கழுத்தில் ஜெயலலிதா படம் அடங்கிய தங்க சங்கிலியை அணிந்தும் வந்திருந்தனர்.
ஒரிரு நாட்களில்…
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. இதுவரை 32 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொகுதிகளுக்கு இன்னும் நேர்காணல் நடத்தப்படவில்லை. அந்த தொகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படவில்லை. அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கென்று வரையறுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணிக்காக காத்து கொண்டிருக்கும் த.மா.கா. பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட ஆர்வம் தெரிவித்து இருந்தது. ஆனால்,  பட்டுக்கோட்டை தொகுதிக்கு நேற்று நடந்த நேர்காணலில், விருப்ப மனு செய்த 2 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply