- அரசியல் செய்திகள், செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.காமராஜ் நீக்கம் ஜெயலலிதா நடவடிக்கை…

சென்னை, ஜூலை. 11-

அ.தி.மு.க.வில் இருந்து, வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க.`எம்.எல்.ஏ.' காமராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கட்சியில் இருந்து நீக்கம்
கழகத்தின் கொள்கை-குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும்,அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த என்.வி.காமராஜ் (வேதாரண்யம் நகரக்கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
புதிய செயலாளர்
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகரக்கழக செயலாளர் பொறுப்பில் எஸ்.எம்.எழிலரசன் (நகரக்கழக முன்னாள்  செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply