- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தென் மாவட்டங்களில் இன்று ஜெயலலிதா, ஸ்டாலின் பிரசாரம் அறுப்புக்கோட்டை, மதுரையில் ஆதரவு திரட்டுகின்றனர்…

மதுரை, ஏப்.15-
தென்மாவட்டங்களில் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் போட்டிபோட்டு பிரசாரம் செய்வது கட்சியினரிடையே விறுவிறுப்பை  ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
அ.தி.மு.க. பிரசாரம்
முதல்–-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 9–-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 20 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை நடந்த விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் 13 வேட்பாளர்களுக்கு  ஆதரவு திரட்டினார். நேற்றுமுன்தினம்  தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் 11 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அருப்புக்கோட்டை
இந்தநிலையில், தென்மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக அருப்புக்கோட்டை– – தூத்துக்குடி சாலையில் உள்ள காந்தி நகரில் 6 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பிசார கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்–-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் அருப்புக்கோட்டைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், ராமநாதபுரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இன்று  ஒரே இடத்தில் கூடுவதால் அருப்புக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கருணாநிதி
இதற்கிடையே தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23–-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தின்னை பிரசாரத்தை தொடங்கினார். சென்னை முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை நகரில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பெரவள்ளுரில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து பேசினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்

இதற்கிடையே மு.க.ஸ்டாலினின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்று தொடங்கும் மு.க.ஸ்டாலின் 16-–ந் தேதி – தேனி,  திண்டுக்கல் (பொதுக்கூட்டம் – தேனி நகரம்), 18–-ந் தேதி – கரூர், திருச்சி  (பொதுக்கூட்டம்– குளித்தலை), 19-–ந் தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர்  (பொதுக்கூட்டம்– குன்னம்), 20, 21-ந் தேதிகளில்– விழுப்புரம், 22-–ந் தேதி  –காஞ்சிபுரத்தில் தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
மதுரையில் பிரசாரம்
மதுரையில் இன்று பிரசாரத்தைத் தொடங்க உள்ள மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். இன்று பிற்பகல் 3 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 3.30 மணிக்கு மேலூர் சென்று வாக்காளர்களைச் சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு மதுரையில் ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு சிந்தாமணி, ஆரப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்ம், சோழவந்தான் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுகிறார். இரவில் உசிலம்பட்டியில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து இரவு தேனி சென்று தங்குகிறார். நாளை (சனிக்கிழமை) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

விறுவிறுப்பு
ஜெயலலிதாவும், மு.க. ஸ்டாலினும் தென்மாவட்டங்களில் இன்று தேர்தல் பிரசாரம் செய்வதால் அ.தி.மு.க. – தி.மு.க. தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் போட்டி பிரசாரம் தேர்தல் களத்தில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply