- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு கொடுக்க மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

சென்னை, பிப்.4-

அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு கொடுக்க மேலும் 3 நாட்கள் (6-ந் தேதி வரை) கால நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.முக. பொதுச்செயலாளரும், முதல்–-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-

மேலும் 3 நாட்கள்
நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 20.1.2016 முதல் 3.2.2016 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.

தற்போது கழக உடன் பிறப்புகள் பலரும் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வருகின்ற 6-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணி வரை கழக உடன்பிறப்புகள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

18 ஆயிரம் பேர் மனு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இதுவரை சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான புதுமுகங்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிட விருப்பத்துடன் மனு கொடுத்துள்ளனர். விருப்ப மனு கொடுப்பதற்கு நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நிறையபேர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்றனர். முதல்–- அமைச்சர் ஜெயலலிதா பெயரில் நேற்று நிறைய பேர் மனு செய்தனர். 234 தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட கோரி அ.தி.மு.க. பிரமுகர்கள் விருப்ப மனு கொடுத்தனர்.

இந்த மாத இறுதியில்…

நேற்று ஒரேநாளில் மட்டும் ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு தொண்டர்கள் மனு செய்யவில்லை. முதல்–-அமைச்சர் ஜெயலலிதா தங்களுக்கும் ஒரு வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

குக்கிராமங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கூட இந்த தடவை எதிர்பார்ப்புடன் மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வினர் கொடுத்துள்ள விருப்ப மனுக்கள் 6–-ந் தேதிக்கு பிறகு தொகுதி வாரியாக பிரிக்கப்படும். அதில் தகுதியுள்ள அ.தி.மு.க.வினர் பட்டியல் தயாரிக்கப்படும். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். அதன் அடிப்படையில் முதல்–-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிடுவார்.

இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அ.திமு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply