- செய்திகள், விளையாட்டு

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

இபோ (மலேசியா) ஏப்.12:-
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று நடக்கிறது.

மலேசியாவில் 25-வது ஆண்டாக அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டியைப் போன்று இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாகும். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு மிக்க ஆட்டம் இன்று நடக்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை 5 முறை கைப்பற்றியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் 3 முறைதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா ஒரே ஒரு முறைதான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணியில் இளைஞர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியைப் பொருத்தவரை இந்தியா ஜப்பானை வீழ்த்தியுள்ளது. அத்தோடு நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் கனடாவை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆக மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ரவுண்ட் ராபின் நிலையில் 3-ம் இடத்தில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் 3 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி கனடாவை மட்டும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடக்கும் அதே நேரத்தில் இன்று உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கும் நடப்புச் சாம்பினான நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மற்றொரு ஆட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மேன்ஸ்,  இந்தியா முழுவதும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்றும் அதே சமயம் அணியின் வீரர்களிடம் இந்தப் போட்டியில் இதுவும் ஒரு ஆட்டம் என்று தான் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதே சமயம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜுனைத், இந்தியா அணிக்கு எதிராக முழுத் திறமையையும் காட்ட வேண்டும் என்றும் அதே சமயம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியாயினும் இரு அணிகளும் 3 புள்ளிகளைப் பெற்று மேலும் முன்னேற வேண்டும் என களம் இறங்கும் என்பதால் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது உறுதி.

Leave a Reply