- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அவதூறு வழக்கில் கருணாநிதி இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்

சென்னை, ஜன.18-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி இன்று நேரில் ஆஜர் ஆகிறார்.

கருணாநிதிக்கு சம்மன்

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியை அப்படியே எடுத்து 21.11.15 அன்று அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அது முரசொலியில் வெளியாகி இருந்தது.

அதில் முதல்–-அமைச்சர் ஜெயலலிதா பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஆதிநாதன் இந்த வழக்கில் ஆஜராக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவர் சார்பில் வக்கீல் ஆஜராகி இடைக்கால தடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று ஆஜர்

ஆனால் கருணாநிதி "நானே நேரில் ஆஜராகி அவதூறு வழக்கை சந்திப்பேன்" என்று அறிவித்தார். அதன்படி அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வருகிறார். அவர் ஆஜராகும் செசன்சு நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி மத்திய போலீஸ் பாதுகாப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், கருணாநிதி இன்று ஆஜராகப் போகும் செசன்ஸ் கோர்ட்டு வளாகம் மாநில போலீசாரின் பாதுகாப்பில்தான் உள்ளது.

Leave a Reply