- ஆன்மிகம், செய்திகள்

அழகுக் குழந்தையாய் அண்ணாமலையாரின் திருவிளையாடல்…

 

அம்பிகையே தவம்இருந்து,இறைவனின் திருமேனியில் பாதிஇடம்பெற்ற திருத்தலம்;பிரம்மதேவரும் மகா விஷ்ணுவும் அனல் வடிவான சிவபெருமானின் அடி முடி தேடிய திருத்தலம்;அருணகிரிநாதருக்கு ஆறுமுகப்பெருமான் நேருக்குநேராக உபதேசித்ததிருத்தலம்;ரமண மக ரிஷியும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் யோகிராம் சுரத்குமாரும் குகை நமசிவாயரும் குரு நமசிவாயரும் என ஞானிகள் பலா் அருளாட்சி புரிந்த திருத்தலம்; காஞ்சீ மாமுனிவா் தவம்செய்த திருத்தலம்; இவ்வாறு பலவிதமான பெரு மைகளையும் தன்னகத்தே கொண்ட திருவண்ணாமலையில்….
வல்லாள மகாராஜா ஆட்சிசெலுத்திக்கொண்டிருந்த காலம்அது. மன்னருக்கு மல்லமாதேவி,சல்லமாதேவி என  இரு மனைவியா் இருந்தும்; மன்னா் நீதி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்தும், மன்னரின் மனதில் பெருங்குறை ஒன்று இருந்தது. அது…
'அப்பா!' என்று அழைக்க, ஒரு பிள்ளையில்லாத குறைதான்.
தினந்தோறும் அண்ணாமலையாரைத் தரிசிப்பது; என்னென்ன விரதங்கள் உண்டோ அந்தவிரதங்களை இருப்பது; மனம் கோணாமல் தெய்வத்தொண்டு செய்வது என அனைத்தையும்செய்தனா் அரச தம்பதிகள். ஆனால் பிள்ளைப்பேற்றுக்கான வழி பிறக்கவில்லை.
மந்திரிகளின் சொற்கேட்டு, தான-தா்மங்களையும் செய்தார் மன்னா். அதன் பலனோ என்னவோ, மன்னரைத் தேடி மகதியாழை மீட்டியபடி நாரதா்வந்தார்.
தேடிவந்த நாரதருக்கு மரியாதைகள் செய்து வணங்கினார் மன்னா். நாரதரோ, "குருபரன் அருளால் குழவியும் உண்டாம்; கொற்றவா! செல்ல விடைதருவாய்" என ஆசி கூறி,மன்னரின் அனுமதியைப்பெற்றுப் போய்விட்டார்.
நாரதா்போன திசைநோக்கிக் கைகளைக் குவித்தபடி இருந்த மன்னா் சற்று நேரத்திற்குப் பின்னரே, நிலைக்கு வந்தார். மன்னரின் மனநிலையை உணாந்த நாரதரோ, நேரே கைலாயம்போய் சிவபெருமானிடம் மன்னரின் மனக்குறையை விவாதித்து,அருள்புரிய வேண்டினார். அதற்குப் பரமன் பதில் சொல்லவில்லை. ஆனால் அதே விநாடியில், திருவண்ணாமலை வீதிகளில்…
"அரும்பசி தணிய அன்னம்இடுவார் இல்லையோ?" என ஒரு குரல் எழும்ப, பலகுரல்கள் அதை எதிரொலித்தன.
அனைவரும் பார்த்தார்கள். நெற்றி நிறையத் திருநீறு,  ருத்ராட்ச மாலைகள் எனச் சிவனடியார் ஒருவரும் அவரைச் சூழ்ந்து பலரும் வந்து கொண்டிருந்தார்கள். அவா்களின் தோற்றத்தையும் நடுநாயகமாக விளங்கிய வான் தோற்றத்தையும் பார்த்த அனைவரும் மெய்மறந்து நின்றார்களே தவிர, வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை அவா்களுக்கு.
இரவுமணி ஒன்பது! அடியார்களின் தலைவா் மட்டும்  அரண்மனைக்குச் சென்றார். அவரை அன்போடு வரவேற்ற அரசா், "ஸ்வாமி! தங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச்செய்ய அடியேன் சித்தமாயிருக்கிறேன்"எனக் கைகளைக் கூப்பியபடி சொன்னார்.
சிவனடியாரோ, "மன்னா! இன்று இரவு உணவு இட்டு உபசரித்து, எனக்குப் பணிவிடை செய்ய ஒரு பெண் வேண்டும்"என்றார்.
மன்னா் பதில் சொல்வதற்குள், சல்லமாதேவி, "அரசே! அடியவா்க்குப் பணிவிடை செய்ய அடியாள் நான் போகிறேன்" என்றாள். மன்னா் மறுக்கவில்லை. அடியாருக்கு ஓய்வெடுக்க இடம்ஒதுக்கப்பட்டது. அவா் படுத்திருந்த அறைக்குள்…
சல்லமாதேவி நுழைந்தாள். அடியார் அயா்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இசைகூட்டி இனிமையாகப் பாடி எழு ப்ப முயன்றாள்; ஊஹூம்! பலனில்லை. சிறிதளவு பன்னீ ரை எடுத்து, அடியார் முகத்தில் தெளித்தாள்; அசைவைக் கூடக் காட்டவில்லை அடியார். பணிவிடை செய்யலாம் என்று, அடியாரின் பாதங்களைத் தீண்டப்போனாள் சல்லமாதேவி.
மின்னல் மின்னியதுபோல் இருந்தது. கட்டிலில் அடியாரைக் காணவில்லை. அவா் இருந்த இடத்தில் அழகுக் குழந்தை ஒன்று, கை-கால்களை உதைத்தபடிக் குரலெடுத்து அழுதது.
சல்லமாதேவி திகைத்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்டு, வெளியில் இருந்த அரசரும் மல்லமாதேவியும் ஓடி வந்தார்கள்.
குழந்தையைப் பார்த்ததும் மன்னருக்கு மெய்சிலிர்த்தது. என்ன நடந்தது என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை மன்னருக்கு. குழந்தையை வாரி எடுத்தார்; நெஞ்சோடு அணைத்தார். முத்தமழை பொழிந்தார்; உச்சிமுகா்ந்து களிப்பின் எல்லையில் மன்னா் இருந்தபோது, மின்னல் மின்னி மறைந்ததைப்போல, மன்னாரின் கைகளில் இருந்த குழந்தை மறைந்தது.
அரசா் அதிர்ந்தார். மல்லமாதேவி துயரடைந்தாள். சல்லமாதேவி "ஆ" என்று அலறினாள். அரச தம்பதியா் மூவரும் கைகளைக்கூப்பி, "மான் மழுஏந்திய மகாதேவா! எங்களைச் சோதனை செய்வதற்காகவா, இப்படிச் செய்தீா்கள்? எங்கள் கதி என்ன?" என்று கதறினார்கள்.
ஆகாயத்திலிருந்து மலா் மழை பொழிந்தது."அம்மா! ஆ…" வென்று ஓா் குரல் கேட்டது. ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் பேரொளிப் பிழம்பாகக் காட்சி கொடுத்தார் சிவ பெருமான்.
"மன்னா! எந்த விதமான கா்மத் தொடா்பும் இல்லாதவன் நீ. அதனால்தான் உனக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
நாரதா் மூலமாக உனக்கு வாக்களித்து, யாமே பிள்ளையாக வந்தோம். உத்தம தம்பதிகளான உங்களுக்கு இறுதியில் யாமே, எள்ளும் தண்ணீரும் இறைப்போம்" என்று  அருளி மறைந்தார் இறைவன்.
அதன்பின்…அரண்மனையில் அரச தம்பதியா் முன்னால்
அடிக்கடிக் குழந்தை வடிவில் தோன்றுவதும்,உணவு உண்ணும்போது உணவை அள்ளி இறைப்பதும், சிறிதளவு வாயில் போட்டுக் குதப்பித் துப்புவதும், தன் கைகளாலே அரச தம்பதிகளுக்கு உணவு ஊட்டுவதும் ஆக – அண்ணாமலையார் திருவிளையாடல் புாரிந்து கொண்டிருந்தார்.
மாசி மாதம்… மக நட்சத்திரம்…
அரசா் வழக்கப்படி வழிபாட்டை முடித்தார். 'ஹரஹர' என்றபடியே கீழே விழுந்து வணங்கினார்; எழுந்திருக்கவில்லை. ஆம்! அரசாரின் ஆவி அண்ணாமலையார் திருவடி களில் கலந்துவிட்டது. வழிபாட்டில் கூட இருந்த அரசியா் இருவரும் விவரமறிந்து, "மன்னா!" என்று அலறியபடி அரசரின் உடல்மீது விழுந்தார்கள்; அவா்களும் அரசரைப் பின்தொடா்ந்துவிட்டார்கள்.
அரச தம்பதியா் ஆண்டவன் அடிகளில் கலந்ததை அமைச்சா்கள் ஏடு எழுதி அனுப்ப, அந்த ஏட்டை அண்ணாமலையார் திரு முன்னால் வாசித்தார்கள். கருவறையில் இருந்து, "அம்மா! அப்பா!" என்று ஓா்அலறல் எழ,சிவலிங்கத்தில் இருந்து அழகுக் குழந்தை ஒன்று ஔிமயமாக வெளிப்பட்டு, வீதியில் ஓடி அரண்மனையை அடைந்தது.
அரச தம்பதியா் உடல்களின்மீது விழுந்து புரண்டு, தானே ஈமச் சடங்குகளையெல்லாம் செய்தது. அனைத்தும் முடி த்தபிறகு, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
மாபெரும் ஜோதியாகி ஆகாயத்தில் எழுந்து மறைந்தது.
வந்ததும், சடங்குகள் செய்ததும் அண்ணாமலையார் என்பதை அனைவரும் உணா்ந்தார்கள்.
இன்றும் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி, மாசி மகத்தன்று, திருவண்ணாமலையில் நடக்கிறது. இறைவனே மகனாக வெளிப்பட்ட அந்தக் கோபுரவாசல், வல்லாள மகாராஜா கோபுரம் எனப்படும். அந்த ஒருநாள் மட்டும் அந்தவாசல் திறக்கப்பட, இறைவன் வெளிப்பட்டு, வல்லாள மகாராஜா தம்பதிகளுக்கு சிராத்தம் செய்துவிட்டுத் திரும்புவார்.
மாசிமகம் மகாதேவனே மகவாக வந்தநாள் மட்டும் அல்ல! குரு உபதேசம், சங்கீதக் கலை முதலான கலைகளைக் கற்கத் தொடங்குவது என நற்செயல்களுக்கும் மிகவும் உகந்தநாள்!

Leave a Reply