- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவரா?

சென்னை, பிப்.3-
அழகிரி மீண்டும் தி.மு.க. சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
நமக்கு நாமே பயணம்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த பயணம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.  விருகம்பாக்கம் தொகுதிக்கு  உட்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை மு.க.ஸ்டாலின் சென்றார்.
கீரை விற்கும் பெண்கள்
அங்கு கீரை மற்றும் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு வந்திருத்த பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் வியாபாரம் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் பழம் மற்றும் பூ மார்க்கெட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் வியாபாரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–-
தேர்தலுக்கு பின்பு
வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது உங்களது குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். மழை வெள்ள பாதிப்பின் போது ஆறுதல் சொல்வதற்கு கூட அமைச்சர்கள் வரவில்லை. ஆனால் நாங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டியில் அரசியல் தலையீடு இருக்காது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். மார்க்கெட் மீண்டும் புதுபொலிவு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வியாபாரிகளாகிய நீங்கள் துணை நிற்கவேண்டும். நமக்கு நாமே பயணம் தேர்தல் முடிந்த பின்னரும் தொடரும். உங்களை மீண்டும் சந்திப்பேன்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், கே.கே.நகர் தனசேகரன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, பாலவாக்கம் விஸ்வநாதன், லோகு, அன்பகம் கலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க.வில் அழகிரி…
நிகழ்ச்சிக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கப்போவதாக வதந்தி பரவுகிறதே?
பதில்:-அது வதந்தியாகத் தானே உள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. எனவே இதுபற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:-வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க சென்னை வரும் மத்திய தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. வற்புறுத்துமா?
பதில்:-.ஏற்கனவே இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். டெல்லியிலும், கனிமொழி எம்.பி. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகுவோம்.
தேர்வாணைய நியமனம்?
கேள்வி:-தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர் பதவிக்கு 11 பேர் நியமிக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:-தமிழ்நாடு தேர்வாணையம் முழுக்க முழுக்க அ.தி.மு.க. கூடாரமாக அமையும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தன்னாட்சி பெற்ற அமைப்பாக இல்லா சூழல் உருவாகி உள்ளது. முதல்–-அமைச்சர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறுப்பினர்களை நியமித்துள்ளார். தேவைப்பட்டால் இதற்கும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply