- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

அலங்காநல்லூர், பாலமேட்டில் 5-வது நாளாக போராட்டம் தீவிரம்

ஒப்பாரி, சாலைமறியல், உண்ணாவிரதத்தால் பதற்றம்
மதுரை, ஜன. 17–:-  ஜல்லிகட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. 5வது நாளாக நேற்றும் சாலைமறியல் ஊர்வலம் நடைபெற்றதால் பதற்றம் நீடிக்கிறது.
மதுரையில் போராட்டம்
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல்பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதியளித்தது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடத்த மீண்டும் தடை விதித்தனர். தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன.
கொடும்பாவி எரிப்பு
நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மதுரை பாலமேட்டில் பொதுமக்கள் கருப்புபட்டை அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வாடிவாசல் முன்பு குவிந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விலங்குகள் நல அமைப்பின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அப்போது  உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் முழக்கமிட்டனர். இது குறித்து  பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உருவபொம்மைகளை எரித்த தமிழ் தேசிய பண்பாட்டு கழகத்தை சேர்ந்த சென்னை அதியமான்  (வயது47), ராஜ்குமார் (44), தேனி மாவட்டம் தேவர் பேரவை பெருமாள் (43),  திருச்சி சிவக்குமார் (55) ஆகியோரை கைது செய்தனர்.

பேருந்துகள் இயங்கவில்லை

இதே போன்று, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டம் நடத்தினர். அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நேற்று 5-வது நாளாக அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. அழகர்கோவில் அருகே  பொய்கைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டியில் சிலர் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றில் கட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பார்த்து ரசித்தனர்.

மஞ்சுவிரட்டு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் இணைந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காளைகளுடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தி விரட்டினர். இதுதொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவனியாபுரம் பகுதியில் ஒரு டவுன் பஸ் மீது கல் வீசப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதேபோல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து அவற்றை திடலில் அவிழ்த்துவிட்டனர். காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த துண்டு, ரூபாய் நோட்டு களை எடுக்க மாடுபிடி வீரர்கள் ஆவசேமாக களத்தில் இறங்கினர். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தன.  நூற்றுக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கினர்.

உண்ணாவிரதம்

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி மக்கள் நல கூட்டணி சார்பில் மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

வைகோ பங்கேற்பு

ஓபுலாபடித்துறையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், அண்ணாத்துரை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்று தடையை நீக்க வலியுறுத்தி பேசினர். அப்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒப்பாரி போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு சின்னம் அணிந்தும் ெபாதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். ஜல்லிக்கட்டு திடலை அடைந்ததும் அங்குள்ள வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து முழக்க மிட்டனர். ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். கும்மியடித்தபடி கோஷமிட்டனர்.

Leave a Reply