- செய்திகள், மாவட்டச்செய்திகள்

அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந்தேதி கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது அலங்காநல்லூர் தான். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காரணமாக உலக புகழ் பெற்றுள்ளது.

இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.

காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் நின்று விளையாடும். இந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்களும் பயிற்சியை தொடங்கி விட்டனர்.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரைபோல அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதில் பொங்கல் திருநாளான ஜனவரி 14-ந் தேதி (வியாழக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

16-ந்தேதி (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும். இங்கும் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போட்டி விதிமுறைகள், போட்டி தொடங்கும் நேரம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீரர்களை மாற்றி களம் இறக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கடைபிடித்து போட்டியை நடத்துவது குறித்து கலெக்டர் அறிவுறுத்தினார். மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்படும்.

ஜல்லிக்கட்டை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறைந்தபட்சம் 300 மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவும், அவர்கள் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களம் இறங்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு, மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை போன்றவை நடத்துவதற்கான தேதி குறித்து விரைவில் முடிவு செய்ய விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க விழா குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு திடலில் தேங்காய் நார்களை பரப்புவது, போட்டியை பார்க்க வருபவர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம், கேலரி அமைப்பது, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பணிகள் வேகம் பிடித்துள்ளன.

Leave a Reply