- செய்திகள்

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…

சென்னை, ஆக. 19-
தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் வழக்கம்
கடந்்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதையொட்டி, 7 ஆண்டு சிறை வாசத்தை முடிவு செய்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 60 வயதுக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் 5 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்திருந்தாலே விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு முடித்துவைப்பு
கைதிகள் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டு விட்ட நிலையில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அண்ணா பிறந்தநாளில்…
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு பெருந்தடையாக இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பத்தாண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், மற்ற வழக்குகளில் தண்டனைக்காலம்  முடிவடைந்த பிறகும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுனர் உத்தரவு மூலம் விடுதலை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அவர்களை நீண்ட சிறை விடுப்பில் அரசு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply