- செய்திகள், மாநிலச்செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் குடியசு தலைவர் ஆட்சிக்கு எதிரான வழக்கு மத்திய அரசுக்கு நாளைக்குள் பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி, ஜன.28-

அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிரான வழக்கில், மத்திய அரசும், மாநில கவர்னரும் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பதில் அளிக்கும்படி, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அரசியல் நெருக்கடி
அருணாசல பிரதேசத்தில், நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு, முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அருணாசல பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் நெருக்கடி நீடித்து வந்ததைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி, குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சி
இதன் அடிப்படையில், அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு, பிரணாப் முகர்ஜி, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.
அதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டதுமே அதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போதே, குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது.
5 நீதிபதிகள் அமர்வு
இதற்கிடையில், காங்கிரஸ் தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில், தீபக் மிஸ்ரா, எம்.பி.லோகூர், பி.சி.கோஸ், என்.வி.ரமணா ஆகிய 5 நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது.

‘முக்கிய விவகாரம்’
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வக்கீல் முகுல் ரோத்தகி, குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்த அறிவிக்கை தொடர்பாக, இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், ‘‘இது மிகவும் முக்கியத்துவம் (சீரியஸ்) வாய்ந்த விவகாரம்’’ என்று குறிப்பிட்டதுடன், மாநில கவர்னர் ேஜாதி பிரசாத் ராஜ்கோவா, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
வெள்ளிக் கிழைமைக்குள்..
உடனே குறுக்கிட்ட முகுல் ரோத்தகி, ‘‘சட்டம் என்றால் சட்டம்தான். சட்டம் அனைவருக்கும் சமமானது’’ என்று கூறி தொடர்ந்து தனது நிலையை வலியுறுத்தியபோது, ‘‘சட்ட நுணுக்கமான ஆட்சேபனைகளை எழுப்ப வேண்டாம் என்று, அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கு தொடர்பாக, அருணாசல பிரதேச கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம், வெள்ளிக்கிழமைக்குள் (நாளை) பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
கவர்னரின் அறிக்கை
வழக்கு தொடர்ந்தவர்கள், வெள்ளிக்கிழமைக்குள் தங்களுடைய திருத்திய மனுவை தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கிய நீதிபதிகள், விசாரணைணை வருகிற 1-ந்தேதிக்கு (திங்கட் கிழமை) தள்ளி வைத்தனர்.
கவர்னர் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல் சத்பால் ஜெயின், கவர்னரின் அறிக்கையில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இடைக்கால தடை
அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், ‘‘குடியரசுத் தலைவர் ஆட்சியை எந்த அடிப்படையில் கவர்னர் பரிந்துரை செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை மேலும் தொடர முடியாது’’ என்றும், சீல் வைத்த கவரில் அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தனர்.
எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளாமல் சம்பந்தப்பட்டவர்கள் இடைக்காலத் தடை பெற முடியாது என்றும், நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.
எதிர்ப்பு
கவர்னர் அறிக்கையின் ரகசியம் பாதகாக்கப்பட ேவண்டும் என்ற கோரிக்கைக்கு, காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பாலி எஸ்.நாரிமன், கபில் சிபல், ராஜீவ் தவான், விவேக் தங்கா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஐந்துக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே சில பிரேரணைகளை வகுத்திருப்பாக அவர்கள் வாதிட்டனர்.

15 நிமிடங்களில்..

வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், கவர்னரின் அறிக்கையை 15 நிமிடங்களில் தாக்கல் செய்யும்படி, கவர்னரின் வக்கீல் ஜெயினுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். முன்னதாக கவர்னரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வக்கீல் ஜெயின் கூறி இருந்தார்.

இதேபோல் மத்திய அரசு சார்பில் வாதாடிய முகுல் ரோத்தகி, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை என்பதால், அவர்களை புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒரே ஒரு அறிக்கை

பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில்தான் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறியபோது குறுக்கிட்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை வெளியான ஜனாதிபதியின் உத்தரவை சுட்டிக்காட்டி, ஒரே ஒரு அறிக்கையின் அடிப்படையில்தான் பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

முன்னதாக வக்கீல்கள் நாரிமன் மற்றும் கபில் சிபல் ஆகியோர், விசாரணையை அவசரமாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

—–

Leave a Reply