- உலகச்செய்திகள், செய்திகள், மாநிலச்செய்திகள்

அரியானா மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர்கள் 2 பேர் கைது

புதுடெல்லி, ஜன.19:-

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர்கள் 2 பேர், அரியானா மாநிலத்தில்,  கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

2 பேர் கைது

அரியானா மாநிலம் மீவாட் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் புன்ஹானா பகுதியில் உள்ள ஒரு மசூதியின் அருகே தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் வகையில் சில இளைஞர்கள் தங்கி இருப்பதாக டெல்லி தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் மற்றும் உளவுப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து சில இளைஞர்களைப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காசிம் மற்றும் அப்துல் சமி ஆகிய 2 பேர், அல்கொய்தா தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் பாகிஸ்தான் சென்று ஏ.கே.47 மற்றும் ‘லைட் மெஷின் கன்’ உள்ளிட்ட துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளை பெற்று திரும்பி வந்துள்ள தகவலையும் சிறப்பு படையினர் கண்டு பிடித்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் சிறப்பு படையினர் கைது செய்ததாக புன்ஹானா நகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மறுப்பு
இருப்பினும், டெல்லி சிறப்பு பிரிவு போலீசின் சிறப்பு கமிஷனர் அர்விந்த் தீப் கூறுகையில், ‘அப்துல் சமி என்ற நபரைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் அல்கொய்தா இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஜகத்பூர் பகுதியில் உள்ள மதராசா பள்ளியின் மதகுரு அப்துல் ரகுமான் என்பவரை டெல்லி சிறப்பு பிரிவினர் கைது செய்தனர். அவருடைய அல்கொய்தா ஆதரவு கருத்துகளால் கவரப்பட்ட அப்துல் சமி உள்ளிட்ட 3 பேர், தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தனர்.

பாகிஸ்தானில்…
இதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் துபாய் நாட்டுக்கு அப்துல் சமி சென்றார். பின்னர் அங்கே ஒரு மாத காலம் தங்கி இருந்த நிலையில், அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றிருக்கிறார்.

அங்கிருந்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மான்சேரா பகுதிக்கு சென்று அல்கொய்தா தீவிரவாதிகளிடம் ஏ.கே.47 மற்றும் ‘லைட் மெஷின் கன்’ உள்ளிட்ட ரக துப்பாக்கி சுடும் பயிற்சிகளையும் பெற்று திரும்பி உள்ளார். பாகிஸ்தானில் உள்ள யூசுப் என்பவர் மூலமாக, அப்துல் சமியின் பயணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

போலீஸ் காவல்
தற்போது அப்துல் சமி மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அபு சுபியான் மற்றும் உமர் ஐதராபாதி ஆகியோர் பாகிஸ்தானிலேயே இன்னமும் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு அர்விந்த் தீப் தெரிவித்தார்.

மேலும், ‘‘கைது செய்யப்பட்டு உள்ள அப்துல் சமியை, டெல்லிக்கு கொண்டு வந்து கொண்டு வந்து, அதிகார வரம்புடைய ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், அவருக்கு வருகிற 1-ந் தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டு உள்ளது’’ என்றும் அர்விந்த் தீப் கூறினார்.

Leave a Reply