- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அரசு கேபிள் டி.வி. மூலம் வீடுகளுக்கு இணையதள வசதி…

சென்னை, மார்ச் 2-
அரசு  கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு அதிவேக அகண்ட  அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் ‘இல்லந்தோறும் இணையம் திட்டத்தை’ முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீடுகள்தோறும் இணையதளம்

‘‘அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்’’ என்று முதல்–-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ‘‘இல்லந்தோறும் இணையம்’’ திட்டத்தை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார்.

தொழில்முனைவோர்மையம்

இதேபோல், ‘தமிழக அரசின் தொலை நோக்கு திட்ட அறிக்கை 2023’-ல் குறிப்பிட்டபடி, மாநிலத்தில் உள்ள தகவல் தொழில் நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவித்திடும் வகையில் சென்னை –தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் ரூ.3.53 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர் மையம்.

மேகக்கணினிய அமைப்பு

மாணாக்கர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்காக மேகக் கணினி சார்ந்த சேவைகள் மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம், சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி உள்கட்டமைப்பினை சிறப்புற பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் செய்யும் பொருட்டு ரூ.10 கோடி செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேகக்கணினிய அமைப்பு என மொத்தம் 13 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த திட்டங்களை முதல்–-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
பேரிடர் மீட்புமையம்
மேலும், திருச்சிராப்பள்ளி எல்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேரிடர் மீட்பு மையம் மற்றும் சென்னை, பெருங்குடியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றிற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி.ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply