- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் எடுத்து நடத்த வேண்டும் தே.மு.தி.க. கோரிக்கை

சென்னை, மார்ச் 26-

அரசு கேபிள் டி.வி.யில் எல்லா சானல்களையும் ஒளிபரப்ப  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அரசு கேபிள் டி.வி.  நிறுவனத்தின் நிர்வாகத்தை, இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
தே.மு.தி.க.வின் ஆசிரியர்-பட்டதாரி அணியின் செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பாபுமுருகவேல், பாஸ்கர் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்திலுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிர்லோஷ் குமாரிடம், பேராசிரியர் ரவீந்திரன் மனு ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து பேராசிரியர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் நியாயமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதில் ஒரு நடவடிக்கையாக, அரசு கேபிள் டி.வி.யில் எல்லா சானல்களையும் ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாகத்தை, இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து நடத்த வேண்டும்.
இதற்கான கோரிக்கை மனுவை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். நடவடிக்கை எடுக்கு அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். தேவைப்பட்டால், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஸிம் ஜைதியிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவோம். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து எடுத்து நடத்தும் என்று எதிர்பார்த்தோம். இனி அந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

Leave a Reply