- செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

அரசு குடியிருப்பில் வாடகை, கட்டண பாக்கியா? கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்

சென்னை, ஏப்.28-
அரசு குடியிருப்புகளில் வசிக்கும் வேட்பாளர்கள், வாடகை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டண பாக்கி இல்லை என்றும், அரசு குடியிருப்புகளில் வசிக்காத வேட்பாளர்கள், அரசு குடியிருப்பில் வசிக்கவில்லை என்றும் நாளை மதியம் 3 மணிக்குள் கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய வேண்டும்.  ‘அபிடவிட்’ தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த  22-ந் தேதி தொடங்கியது. கடந்த 24, 25-ந் தேதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. 25-ந் தேதி (நேற்றுமுன்தினம்) வரை 1050 வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்துள்ளனர்.

‘அபிடவிட்’ தாக்கல்
தமிழகம் முழவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுவுடன், தங்களின் சொத்துக்களின் மதிப்பு, வழக்குகள், கடன்கள் ஆகியன பற்றிய விவரங்களை ‘அபிடவிட்’டாக(பிரமாண பத்திரம்) தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், வேட்பாளர்கள் அனைவரும் கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கட்டண பாக்கியா?

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
‘2015-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி, வேட்பாளர்கள் அனைவரும் கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய வேண்டும்’ என்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர், மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான குடியிருப்பில் வசிக்கவில்லை என்றால், எந்த வகையான அரசு குடியிருப்பிலும் வசிக்கவில்லை என்று கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு வேட்பாளர், எம்.பி.யாக இருந்து டெல்லியில் மத்திய அரசு சார்பில் அவருக்கு குடியிருப்பு ஒதுக்கப்பட்டிருக்கலாம். சில வேட்பாளர்கள், வீட்டு வசதி வாரியம் போன்ற மாநில அரசின் குடியிருப்பில் வசித்து வரலாம். அத்தகைய வேட்பாளர்கள், சம்மந்தப்பட்ட அரசு துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வாடகை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம் பாக்கி இல்லை என்பதற்காக சான்றிதழ்களை இணைத்து, கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு(மார்ச் 4-ந் தேதிக்கு) மூன்று மாதங்கள் முந்தைய 10 ஆண்டுகளில்

வேட்புமனு தள்ளுபடி

மேற்கண்ட எந்த கட்டண பாக்கியும் இல்லை என்று கூடுதல் ‘அபிடவிட்’டை, சான்றுகளுடன் தாக்கல் செய்ய வேணடும்.
நாளை மதியம் 3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அதற்குள், வேட்பாளர்கள் அனைவருமே, கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்ய வேண்டும். கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்யாவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 36-ன் படி அவர்களது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வழிவகை உள்ளது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
கடும் நெருக்கடி
நாளை மதியம் 3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், கடைசிநேரத்தில், புதிய உத்தரவு வெளியாகியுள்ளது, ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர்கள் யாராவது, அரசு குடியிருப்பில் வசித்து வந்து, மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டண பாக்கி வைத்திருந்தால், அவர்கள் கூடுதல் ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், கூடுதல் ‘அபிடவிட்’டை, வேட்பாளர்களே நேரில் வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தர வேண்டுமா அல்லது தங்களது முகவர் மூலம் கொடுத்து அனுப்பலாமா என்பது பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
தலைவர்களுக்கும் சிக்கல்
மேலும், அரசு குடியிருப்பில் வசிக்காத வேட்பாளர்களள், அரசு குடியிருப்பில் வசிக்கவில்லை என்று கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வசிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணிராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போன்ற தலைவர்கள், வெளிமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள், நாளை மதியம் 3 மணிக்குள் அங்கு சென்று கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்ய வேண்டுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
வேட்பாளர்கள் கலக்கம்

கூடுதல் ‘அபிடவிட்’டை தாக்கல் செய்யாவிட்டால், வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், வேட்பாளர்கள் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தள்ளுபடி ஆகி விடுமோ என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply