- செய்திகள், தேசியச்செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடையை முறைப்படுத்த போதிய சட்ட விதிகள் இல்லை

புதுடெல்லி, டிச.15:-

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடையை முறைப்படுத்த போதுமான சட்டவிதிகள் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கருத்து தெரிவித்தார்.

சர்வதேச கருத்தரங்கு

டெல்லியில் நேற்று ‘தேர்தல் நடைமுறையில் பணபலத்தின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகளை முறைப்படுத்த போதுமான சட்டங்கள் இல்லை என்றும், இதனால், அரசியல் கட்சிகளின் மொத்த நிதி ஆதாரங்களில் 80 சதவீதம் சோதனையில் இருந்து தப்பி விடுகின்றன என்று கூறினார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

80 சதவீத நிதி ஆதாரம்

அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள்  இல்லாததால், அவை தங்களுடைய நிதி  ஆதாரத்தை எந்த அளவிலும் அதிகரித்துக் கொள்ள இயலும். தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், பொது கட்சி பிரசாரமாக அமைந்தால், எந்த அளவு பணத்தையும் அரசியல் கட்சிகள் செலவழிக்கலாம்.

அதேபோன்று, தேர்தல் நடைபெறும் காலத்தில் தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், தொகுதி அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஏராளமான நன்கொடைகளை வாங்குவது மற்றும் செலவழிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுகிறது.

கட்சிகளுக்கு வழங்கப்படும் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான நன்கொடைகள் தேர்தல் கமிஷனின் ஆய்வு மற்றும் பொதுவான ஆய்வுகளில் இருந்து தப்பி விடுகின்றன. எங்களிடம் உள்ள தகவல் விவரங்களின்படி அரசியல் கட்சிகளிடம் உள்ள மொத்த பணத்தில் 80 சதவீதம் நிதி ஆதாரத்தை மேற்கண்ட ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான நன்கொடைகள் உருவாக்கி விடுகின்றன.

முறைப்படுத்த வேண்டும்

இதுதொடர்பான அறிக்கையை நாங்கள் கம்பெனிகள் துறை அமைச்சகம், உள்துறை  அமைச்சகம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிற்கு அவர்களுடைய முடிவின்படி  நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைத்து இருக்கிறோம்.

இத்தகைய நிதி ஆதாரங்கள் சட்டத்தால் தடை செய்யப்படவும் இல்லை, கட்டுப்படுத்தப்படவும் இல்லை. அத்தகைய நன்கொடைகள் எங்கே இருந்து வருகின்றன என்ற விவரங்களும் எங்களுக்கு தெரிவதில்லை. எனவே, எங்களுடைய கருத்தின்படி அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் அனைத்து நன்கொடை  விவரங்களையும் வெளியிட வேண்டும்.

தேர்தல் டிரஸ்டுகள்,  அரசு நிறுவனங்ளைத் தவிர எந்தவொரு நபரிடம் இருந்தும் பணத்தை நன்கொடையாகப் பெற்று அவற்றை அரசியல் கட்சிகளுக்கு பங்களிப்பாக வழங்க முடியும். எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடைய நிதி பயன்பாடு மற்றும் நிதி ஆதாரங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு நசிம் ஜைதி தெரிவித்தார்.

Leave a Reply