- செய்திகள்

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது பம்பை நதி தூர்வாரப்படுகிறது…

சபரிமலை, ஆக.25-

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் மண்டல பூஜைக்கான முன் ஏற்பாடுகள் தொடங்கியது. பம்பை நதியை தூர்வாரும் பணியும் நடைபெறுகிறது.

மண்டல பூஜை

கேரளாவில் உலக அளவில் பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் பூஜைகளில் மண்டல- மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த பூஜைகளின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

கார்த்திகை மாதம் 1-ந் தேதி மண்டல பூஜை தொடங்கும். அன்று முதல் மாலை அணிந்து இருமுடி கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வருவார்கள். மார்கழி, தை முதல் வாரங்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

அடிப்படை வசதிகள்

கார்த்திகை 1-ந் தேதிக்கு இன்னும் 80 நாட்களே உள்ளதால் சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற பணிகளும் தற்போது தொடங்கி உள்ளன. சபரிமலையில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.2 கோடியில் பணிகள் வருகிற 1-ந்தேதி தொடங்க உள்ளது.

பம்பை நதி

சபரிமலை பகுதியில் ஓடும் புனித நதியான பம்பை நதியில் அய்யப்ப பக்தர்கள் நீராடி விட்டுதான் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். புனித நீராடும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை பம்பை நதியில் விட்டு விடும் செயல் அதிகரிப்பதால் பம்பை நதி மாசடைகிறது. எனவே கடந்த சில ஆண்டுகளாக இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த செயல் ஓரளவு குறைந்து உள்ளது.

இந்த நிலையில் பம்பை நதியை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கி உள்ளது.

கண்காணிப்பு கேமரா

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவனை, அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவை தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு கிடைப்பதற்காக அரவனை, அப்பம் தயாரிக்கும் நவீன எந்திரங்கள் பம்பை கணபதி கோவில் அன்னதான மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைப் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்கவும் முன்ஏற்பாடு நடவடிக்கை தொடங்கி உள்ளது.

Leave a Reply