- செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேவைக்காக புதிய இணையதளம்

கொரோனா தொற்று காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு வருவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு வீட்டிலிருந்தே அவர்கள் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள தனி இணையதளத்தை தொழிலாளர் நலத்துறை தொடங்கியுள்ளது.புதிய இணையதளம் தொடக்கம்இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :-“தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கிவருகின்றன.

கொரோனா வைரஸ் நோய் சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டும், தனி மனித இடைவெளியைப் பராமரிக்கும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், தொழிலாளர்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்வதற்கும், பதிவினைப் புதுப்பித்தல் செய்வதற்கும், கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளின் கேட்பு மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கும் மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்தச் சிரமத்தைப் போக்கும் விதமாக முதற்கட்டமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளும் வசதி 19.06.2020 முதல் ஏற்படுத்தப்பட்டு 20.07.2020 முதல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது மேற்படி 17 வாரியங்களிலும் தங்களது பதிவினைப் புதுப்பித்தல் செய்துகொள்ளும் வசதியும், நலத்திட்ட உதவிகளுக்கான கேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்கும் வசதி, திருத்தம் மேற்கொள்ளும் வசதி, மாவட்டங்களுக்கு இடையே உறுப்பினர் பதிவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேற்று (26.08.2020) தலைமைச் செயலகத்தில் இணையதளம் மூலம் புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களைச் சமர்ப்பிக்கும் வசதியினைத் தொடங்கி வைத்து, அதன் அடையாளமாக புதுப்பித்தலுக்கான சான்றிதழ்களை 6 தொழிலாளர்களுக்கும், கல்வி, திருமணம் மற்றும் விபத்து மரண திட்ட உதவிகளை 4 தொழிலாளர்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் முனைவர் நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியச் செயலாளர்(பொ) யாஸ்மின் பேகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply