- செய்திகள்

`அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சில் எந்த தவறும் இல்லை' சபாநாயகர் ப.தனபால் தீர்ப்பு…

சென்னை, ஜூலை.30-
சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயகர் தனபால் தீர்ப்பு வழங்கினார்.
அமைச்சர் பேச்சு
சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தி.மு.க. ஆட்சியின் போது மதுரையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதுபற்றி கருத்து தெரிவித்த சபாநாயகர் அவைக்குறிப்பை படித்து பார்த்து விட்டு பிரச்சினைக்குரியதாக இருந்தால் அமைச்சரின் கருத்துக்கள் நீக்கப்படும் என்று கூறி இருந்தார். இதுபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஈரோடு தென்னரசு ஆகியோர் கூறிய சில கருத்துக்களையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
சபாநாயகர் தீர்ப்பு
இது தொடர்பாக நேற்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம, பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முடித்ததும் சபாநாயகர் தனது தீர்ப்பை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
வழக்கை பாதிக்காது
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சபையில் தெரிவித்த கருத்து அந்த சம்பவம் தொடர்பாக வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. எனவே அவரது கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போல ராஜன் செல்லப்பா, ஈரோடு தென்னரசு ஆகியோரின் பேச்சுக்களிலும் அவை மரபுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் இல்லை.
எனவே அவர்களின் கருத்துக்களையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார்.

Leave a Reply